Bihar Assembly Election 2025, NDA Seat Sharing: 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் நவம்பர் 14ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Bihar Assembly Election 2025: பரபரப்பான கட்டத்தில் பீகார் களம்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளை தாண்டி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பீகாரில் 7.42 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் ஆளும் தேசிய ஜனதா கூட்டணிக்கு பாஜக மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமை தாங்குகின்றன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சம்தா உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணிக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்குகிறார். அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அவர் திகழ்கிறார். இக்கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்), விகாஷீல் இன்சான் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இன்னும் தேர்தலுக்கு சுமார் 20 நாள்களே இருக்கும் வேளையில், இருக்கூட்டணிகளின் தொகுதி பங்கீடும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
NDA Seat Sharing: தே.ஜ. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி?
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதியிலும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சிகள் தலா 6 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன, மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் தெரியவில்லை.
NDA Seat Sharing: பாஜகவின் 83 வேட்பாளர்கள்
பாஜகவை பொருத்தவரை இரு கட்டமாக மொத்தம் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஏற்கெனவே, 71 வேட்பாளர்களை முதற்கட்டமாக பாஜக அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை மேலும் 12 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆனந்த் மிஸ்ரா, பக்சர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். மேலும் நேற்று பாஜகவில் இணைந்த பிரபல நாட்டுப்புற பாடகியான மைதலி தாக்கூர், அலிநகர் தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BJP releases second list of 12 candidates for #BiharElections2025
Singer Maithili Thakur fielded from the Alinagar seat. Former IPS officer Anand Mishra from the Buxar seat pic.twitter.com/XuJCtEGjpA
— ANI (@ANI) October 15, 2025
NDA Seat Sharing: JDU-வின் 57 வேட்பாளர்கள்
முன்னதாக, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திவிட்டது. இதில் 5 அமைச்சர்களின் பெயர்களும் அடக்கம். அமைச்சர்கள் விஜய் குமார் சௌத்ரி சராய் ரஞ்சன் தொகுதியிலும், ஷ்ரவன் குமார் நாளந்தா தொகுதியிலும், சுனில் குமார் போரே (தனி) தொகுதியில் இருந்தும், கௌஷல் கிஷோர் ராஜ்கிர் தொகுதியில் இருந்தும், மகேஷ்வர் ஹசாரி கல்யாண்பூரில் இருந்தும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பாகுபலிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Janata Dal United (JDU) releases the first list of candidates for the Bihar Assembly Elections. pic.twitter.com/Zb2G7PZvv0
— ANI (@ANI) October 15, 2025
NDA Seat Sharing: மூன்று பாகுபலிகள் - யார் அவர்கள்?
அதாவது, மொகாமா தொகுதியில் இருந்து போட்டியிடும் அனந்த் சிங், மன்ஹார் தொகுதியில் இருந்து போட்டியிடும் உமேஷ் குஷ்வாஹா, சோன்பர்சா (தனி) தொகுதியில் இருந்து ரத்னேஷ் சதா ஆகியோரே அந்த மூன்று பாகுபாலிகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் விரிவாக காணலாம்.
Bihar Election 2025: அனந்த் சிங்
மொகாமா தொகுதியில் இருந்து 1990, 2000, 2005, 2010, 2015, 2020 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். இதில் இரண்டு முறை ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகவும், ஒருமுறை சுயேச்சையாகவும் போட்டியிட்டு வென்றார். 2022ஆம் ஆண்டில் UAPA தண்டனை காரணமாக இவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி நீலம் தேவி அங்கு போட்டியிட்டு வென்றார். சமீபத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையில் இருந்து பாட்னா உயர் நீதிமன்றம் இவரை விடுவித்ததை தொடர்ந்து தற்போது அவர் இங்கு போட்டியிடுகிறார்.
இவர் மீது மொத்தம் 28 குற்ற வழக்குகள் உள்ளன. இவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளை சேர்த்தால் மொத்த சொத்து மதிப்பு ரூ.37.88 கோடியாகும். அதில் ரூ.3.23 கோடி மதிப்பிலான மூன்று சொகுசு கார்களும் அடங்கும். இவை அனைத்தும் அவர் சமர்பித்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.77.62 லட்சம் ஆகும்.
Bihar Election 2025: ரத்னேஷ் சதா
இவர் மிக எளிய பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என கூறப்படுகிறது. இவரது தந்தை ஒப்பந்த கூலியாக பணியாற்றியிருக்கிறார். ரத்னேஷ் சதாவும் ஆரம்ப கட்டத்தில் ரிக்ஷா இழுக்கும் பணியல் ஈடுபட்டிருக்கிறார். 1987ஆம் ஆண்டில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், சோன்பர்சா தனித் தொகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா கட்சியின் வேட்பாளராக வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக மூன்று முறை இங்கு வெற்றி பெற்றார். இவர் துணை தலைவர் உள்ளிட்ட பல முக்கிய கட்சிப் பொறுப்பையும் வகித்துள்ளார்.
கட்சியில் தலித் சமூகத்தின் முகமாக திகழும் இவர்தான், ஐக்கிய ஜனதா தளம் தலித் பிரிவு தலைவராக உள்ளார். இவர் முசாஹர் சமூகத்தைச் சேர்ந்தவர். பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியின் சமூகத்தைச் சேர்ந்தவர் எனலாம்.
Bihar Election 2025: உமேஷ் குஷ்வாஹா
இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் மன்ஹார் தொகுதியில் போட்டியிட்டு, ஆர்ஜேடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2015இல் பாஜக வேட்பாளரை இதே தொகுதியில் தோற்கடித்தார். 2021ஆம் ஆண்டில் ஜக்கிய ஜனதா தளத்தின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இது ஐக்கிய ஜனதா தளம் அதன் உண்மையான ஆதாரவு தளமான லவா - குசா (மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களான குர்மி - குஷ்வாஹா ஆகியோரின் இணைப்பு) தளத்திற்கு மீண்டும் திரும்புவதை குறிக்கிறது.
Bihar Election 2025: தேசிய ஜனதா கூட்டணியில் சிக்கல்?
கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் சிராக் பஸ்வானின் கட்சி, ஐக்கிய ஜனதா தளத்தின் 25 வேட்பாளர்களை தோற்கடித்திருந்தது. இந்த முறை சிராக் பஸ்வானின் கட்சிதான் வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக கருதப்படும் வேளையில், தற்போது அந்த கட்சிக்கு அதிருப்தியை அளிக்கும் விதமாக வந்துள்ளது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (JDU) வேட்பாளர்கள் பட்டியல். சிராக் பஸ்வான் மட்டுமின்றி ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் அதிருப்தியில் இருக்கிறார்.
அதாவது, JDU வேட்பாளர்களை அறிவித்துள்ள 4 தொகுதிகளையே சிராக் பஸ்வான் மற்றும் உபேந்திர குஷ்வாஹா தொகுதி பங்கீட்டின் போது கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நிதிஷ் குமார் அவர்களின் கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்துள்ளார் என்றே கூறப்படுகிறது. தே.ஜ. கூட்டணியில் எதுவுமே சரியில்லை என ஏற்கெனவே உபேந்திர குஷ்வாஹா புகைச்சலை கிளப்பியிருந்த நிலையில், தற்போது நிதிஷ்குமாரின் இந்த செயல் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
மேலும் படிக்க | பீகார் தேர்தல் 2025: வாக்காளர்களை ஈர்க்கும் 5 முக்கிய தலைவர்கள் - யார் யார் பாருங்க!
மேலும் படிக்க | பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்: தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! பிரதமர் மோடியின் புதிய திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









