)
இந்தியா முழுவதும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே எப்போதும் சண்டை இருந்து கொண்டே இருக்கும். சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வாடகை வீடு கிடைப்பது மிகவும் சிரமம். அப்படி கிடைத்தாலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். சமீப காலமாக கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதனை சரி செய்யவும், வீட்டு வாடகையை முறைப்படுத்தவும், கர்நாடக மாநில அரசு 1999 ஆம் ஆண்டின் கர்நாடக வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தில் சில அதிரடி திருத்தங்களை கொண்டு வர உள்ளது. இந்த புதிய திருத்தங்களின்படி, விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பத்து மடங்கு வரை கடுமையாக்கப்பட்டுள்ளது.
கடுமையாக்கப்படும் அபராதங்கள்
புதிய சட்ட திருத்தத்தின் மிக முக்கிய அம்சமே, அபராத தொகைகள் பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதுதான். உதாரணமாக வீட்டு உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், வாடகைக்கு எடுத்த வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும் வாடகைதாரர்களுக்கு, தற்போதைய அபராத தொகையான ரூ.5,000-லிருந்து, ரூ.50,000 ஆக உயர்த்தப்படுகிறது. உள்வாடகைக்கு விடுவதை அறிந்தும், அதனை அனுமதிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். அவர்களுக்கான அபராத தொகை ரூ.3,000-லிருந்து ரூ.30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் செயல்படும் சொத்து புரோக்கர்கள் மற்றும் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 20-இன் கீழ் பதிவு செய்ய தவறும் புரோக்கர்களுக்கு, நாள் ஒன்றுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் புதிய நடவடிக்கைகள்
வாடகை ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், ஆவணங்கள் இல்லாத முறைசாரா ஒப்பந்தங்களை குறைக்கவும் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இனிவரும் காலங்களில், அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் பதிவு செய்வதற்காக ஒரு பிரத்யேக ஆன்லைன் போர்டல் (Online Portal) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது இரு தரப்பினருக்கும் இடையேயான தகராறுகளை குறைக்க உதவும். வாடகை தொடர்பான தகராறுகளை விரைவாக விசாரித்து தீர்வு காண்பதற்காக, ஒரு விரைவு தீர்வு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். இது, வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் தேங்குவதை குறைத்து, விரைவான நீதியை உறுதி செய்யும்.
இரு தரப்பினரையும் பாதுகாக்கும் அம்சங்கள்
இந்த சட்டம், வாடகைதாரர்களை மட்டும் குறிவைக்காமல், வீட்டு உரிமையாளர்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் சமநிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நியாயமான வாடகையை நிர்ணயிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இது, வாடகைதாரர்களை திடீர் மற்றும் அதீத வாடகை உயர்விலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், வீட்டு உரிமையாளர்களுக்கும் நியாயமான வருமானத்தை உறுதி செய்யும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களை காரணமின்றி திடீரென வெளியேற்றுவதைத் தடுக்க, போதுமான கால அவகாசத்துடன் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். இந்த மசோதா, விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருத்தங்கள், கர்நாடகாவின் வாடகை வீட்டு சந்தையை நவீனப்படுத்தி, இரு தரப்பினரின் உரிமைகளையும் சமமாக பாதுகாக்கும் ஒரு நேர்மையான சூழலை உருவாக்கும் என கர்நாடக மக்கள் நம்புகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ