)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பலுசிஸ்தான் குறித்து பேசியது பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு, சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலின் உண்மைத்தன்மை என்ன மற்றும் உண்மையில் நடந்தது என்ன குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், சமீபத்தில் ஜாய் ஃபாரம் 2025 என்ற இரண்டு நாள் பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைத்துறை, தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், பாலிவுட்டின் மூன்று கான்-களான ஷாருக் கான், அமீர் கான், மற்றும் சல்மான் கான் ஆகியோரும் பங்கேற்றனர். மத்திய கிழக்கில் இந்திய சினிமாவின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றிய சல்மான் கான், "இன்று, நீங்கள் ஒரு இந்தி படத்தையோ, தமிழ், தெலுங்கு அல்லது மலையாள படத்தையோ எடுத்து, இங்கு சவுதி அரேபியாவில) வெளியிட்டால, அது நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து, சூப்பர்ஹிட்டாகிறது. ஏனென்றால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பலுசிஸ்தான் என பல நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு வந்து பணியாற்றுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
சல்மான் கான் தனது பேச்சில், பாகிஸ்தானையும், பலுசிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக குறிப்பிட்டது தான் இந்த சர்ச்சையின் தொடக்கப் புள்ளி. பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி, பல ஆண்டுகளாக போராடி வரும் பலூச் பிரிவினைவாத தலைவர்கள், சல்மான் கானின் இந்த பேச்சை உடனடியாக வரவேற்று, அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது. இதை தொடர்ந்து, "சல்மான் கானின் கருத்து, பாகிஸ்தானுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண அரசு, சல்மான் கானை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (1997)-ன் கீழ், பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துவிட்டது" என்று ஒரு தகவல், போலியான அரசு ஆவணம் போன்ற ஒரு படத்துடன், சமூக ஊடகங்களில் வேகமாக பரவ தொடங்கியது.
இந்தசெய்தி, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், இது ஒரு அப்பட்டமான வதந்தி என்பதே உண்மை. இதற்கான காரணங்கள், பாகிஸ்தான் மத்திய அரசோ, பலுசிஸ்தான் மாகாண அரசோ, அல்லது பாகிஸ்தானின் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஊடகமோ, இது தொடர்பாக எந்தவிதமான செய்தியையும் வெளியிடவில்லை. மேலும் ஒரு வெளிநாட்டவரை பயங்கரவாதி என்று அறிவிக்கும் அதிகாரம், ஒரு நாட்டின் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. பாகிஸ்தானின் ஒரு மாகாண அரசுக்கு, அந்த அதிகாரம் கிடையாது. இதுவே, இந்த ஆவணம் போலியானது என்பதை உறுதி செய்கிறது.
எனவே, சல்மான் கானின் பேச்சு, சில விவாதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததாக பரவும் செய்தி, முற்றிலும் ஆதாரமற்ற ஒரு வதந்தியே ஆகும். சமூக ஊடகங்களில் பரவும் அனைத்து தகவல்களையும், அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யாமல், நம்ப வேண்டாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ