)
நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில், பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ.300 மானியத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2025-26ஆம் நிதியாண்டு வரை இந்த மானியத்தை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏழை மக்களை விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மானியம் குறித்த முக்கிய அம்சங்கள்
இந்த மானிய திட்டத்தின்படி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ஒன்பது 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் வரை, ஒரு சிலிண்டருக்கு ரூ.300 மானியமாக வழங்கப்படும். 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு, இந்த மானிய தொகை விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும். இந்த மானிய திட்டத்திற்காக, 2025-26ஆம் நிதியாண்டில் அரசுக்கு சுமார் ரூ.12,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் சுமார் 10.33 கோடி குடும்பங்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றன.
உஜ்வாலா திட்டத்தின் தாக்கம்
2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா யோஜனா, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தின் கீழ், இணைப்பு பெறுபவர்களுக்கு முதல் சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மானியத்தின் விளைவாக, உஜ்வாலா பயனாளிகளிடையே சமையல் எரிவாயு பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. 2019-20ல் சராசரியாக 3 சிலிண்டர்கள் மட்டுமே பயன்படுத்திய நிலையில், 2024-25 நிதியாண்டில் இது சுமார் 4.47 சிலிண்டர்களாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நிவாரணம்
இதே அமைச்சரவை கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு ரூ.30,000 கோடி இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த போதிலும், உள்நாட்டில் சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் வைத்து, பொதுமக்களுக்கு மலிவு விலையில் சிலிண்டர்களை விநியோகித்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த இழப்பீட்டு தொகையானது, 12 மாதத் தவணைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆதரவு, எண்ணெய் நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ