)
Artificial Intelligence துறையில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வரும் OpenAI நிறுவனம், இந்திய பயனர்களுக்காக ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள பயனர்கள் அனைவருக்கும், அந்நிறுவனத்தின் மேம்பட்ட சேவையான ChatGPT Go-வை ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 4 இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள அந்நிறுவனத்தின் முதல் DevDay Exchange நிகழ்வை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு சமூகத்துடன் தனது உறவை வலுப்படுத்திக்கொள்ளும் ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ChatGPT Go என்பது OpenAI நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சக்திவாய்ந்த மாடலான GPT-5 கொண்டு இயங்கும் ஒரு இடைநிலை சந்தா சேவையாகும். இது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை மலிவு விலையில் வழங்கும் நோக்கில் இது இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் அதிக எண்ணிக்கையிலான கேள்விகளை கேட்கலாம், தினசரி அதிக படங்களை உருவாக்கலாம், பெரிய அளவிலான கோப்புகள் மற்றும் படங்களைப் பதிவேற்றலாம். மேலும், தங்களுக்கு ஏற்றவாறு உரையாடல்களை தனிப்பயனாக்க உதவும் வகையில் நீட்டிக்கப்பட்ட நினைவகத் திறனையும் இது கொண்டுள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களுக்கான தேவை இருப்பதை உணர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்ததிட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, சந்தாதாரர்களின் எண்ணிக்கை முதல் மாதத்திலேயே இருமடங்காகியது. இதுவே, இந்த சேவையை சுமார் 90 உலக நாடுகளுக்கு விரிவுபடுத்த OpenAI-க்கு உந்துதலாக அமைந்தது.
ChatGPT பயனர்களின் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாக விளங்குகிறது. மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் முதல் மென்பொருள் உருவாக்குநர்கள் வரை லட்சக்கணக்கானோர் தங்களின் படைப்பாற்றல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரத்யேக சலுகை, OpenAI-யின் ‘இந்தியாவுக்கு முதலிடம்’ என்ற அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். மேலும், செயற்கை நுண்ணறிவுத் திறனை வளர்ப்பதற்கான தேசிய முயற்சியான ‘இந்தியாஏஐ மிஷன்’ திட்டத்துடனும் இது ஒத்துப்போகிறது. இந்த இலவச அணுகல் மூலம், பெருநகரங்களைத் தாண்டி இந்தியாவின் பரந்த டிஜிட்டல் சமூகத்திற்கும் செயற்கை நுண்ணறிவு அறிவையும், பயன்பாட்டையும் கொண்டு சேர்ப்பதே தங்களின் நோக்கம் என OpenAI தெரிவித்துள்ளது.
இது குறித்து OpenAI நிறுவனத்தின் துணைத் தலைவரும், ChatGPT-யின் தலைவருமான நிக் டர்லி கூறுகையில், "இந்தியாவில் எங்களது முதல் DevDay Exchange நிகழ்வுக்கு முன்னதாக, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் பலன்களை இன்னும் அதிகமான மக்கள் எளிதில் பெறுவதற்கு இந்த இலவச திட்டத்தை அறிவிக்கிறோம். இந்த கருவிகளைக் கொண்டு எங்கள் பயனர்கள் உருவாக்கப் போகும் அற்புதமான விஷயங்களைக் காண நாங்கள் ஆவலாக உள்ளோம்," என்றார்.
ஏற்கனவே ChatGPT Go சந்தா செலுத்தி வரும் இந்திய பயனர்களுக்கும் இந்த 12 மாத இலவச காலம் பொருந்தும் என்றும், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் OpenAI உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து Perplexity AI நிறுவனம் இலவச சேவை வழங்கி வரும் நிலையில், தற்போது Chat GPTம் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ