)
Vice President Election, NDA Candidate CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தற்போதைய மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
Vice President Election: பதவி விலகிய ஜெகதீப் தன்கர்
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை கருத்தில்கொண்டு பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கிய அன்றைய இரவே, ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கேள்விகளை எழுப்பியது. தொடர்ந்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற பரபரப்பும் அப்போது முதலே தொற்றிக்கொண்டது.
Vice President Election: துணை ஜனாதிபதியாகும் தமிழர்...?
இந்தச் சூழலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரே இத்தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதால் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவது ஏறத்தாழ உறுதி எனலாம். இருப்பினும் இந்தியா கூட்டணி எதிர் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்திக்கிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Vice President Election: துணை ஜனாதிபதி தேர்தல் இருக்குமா?
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனு ஆய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும். ஒருவேளை தேர்தல் உறுதியானால் செப். 9ஆம் தேதி நடைபெறும், அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடக்கும். எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாதபட்சத்தில் என்டிஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். முன்னதாக, சி.பி. ராதாகிருஷ்ணன் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
#BreakingNews | துணை ஜனாதிபதி தேர்தல்: NDA வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!#ZeeTamilNews | #NDA | #BJP | #CPRadhakrishnan pic.twitter.com/XAT3W4LBJb
— Zee Tamil News (@ZeeTamilNews) August 17, 2025
CP Radhakrishnan: யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்ற முழு பெயரைக் கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி திருப்பூரில் பிறந்தார். இவரது பொது வாழ்வு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து தொடங்கியிருக்கிறது. அப்படியே பாஜகவில் இணைந்துவிட்டார். 1998 மக்களவை தேர்தலிலும், 1999 மக்களவை தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு கோவை தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜகவின் மூத்த தலைவரான இவர் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
இவர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவின் ஆளுநராக இருந்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்துவந்தார். இதற்கிடையில் 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை தெலுங்கானாவின் ஆளுநராகவும், 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.
Vice President: துணை ஜனாதிபதியாக இருந்த தமிழர்கள்.,.
இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பேர் துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர். அதிலும் நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை குறிப்பிட வேண்டும். இவர் 1952ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டுவரை 10 ஆண்டுகளுக்கு துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார். இவர் இரண்டு முறையும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், நாட்டின் 7வது துணை ஜனாதிபதியாக தேர்வான ராமசாமி வெங்கட்ராமனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். இவர் 1984ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு சுமார் மூன்று வருடங்கள் துணை ஜனாதிபதியாக இருந்தார். தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் குடியரசுத் துணைத் தலைவராகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ