)
டெல்லி தெற்கு, புஷ்ப் விஹாரை சேர்ந்த பெண், ஆக்ரிதி. இவருக்கு 28 வயது ஆகிறது. இவர், சத்தார்பூரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்புதான், அரஸ்து சிக்கா என்கிற வாலிபருடன் திருமணம் ஆகியிருக்கிறது.
ஆக்ரிதி, அரஸ்து சிக்கா என்கிற வாலிபருடன் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் காதல் உறவில் இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருப்பதாக அனைவரும் நினைத்த வேளையில்தான், ஒரு துயரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஆக்ரிதி, லோதி காலனியில் இருக்கும் ஒரு குடியிருப்பு வளாகத்தின் 3வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால், இவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்த பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக அக்ரிதியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு, ஆக்ரிதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர்.
ஆக்ரிதியின் இந்த இறப்பு அவருடைய குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர், மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ஆக்ரிதியின் கணவர் வீட்டார் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆக்ரிதி இறந்து கிடந்த இடமோ, அவர் கணவருடன் வசித்து வரும் இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடமாக இருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரிக்கையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஆக்ரிதியின் இறப்பில் மர்மம் இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர்.
ஆக்ரிதியின் குடும்பத்தாரும் எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவர், வரதட்சணை கொடுமை காரணமாக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஆக்ரிதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பேசுகையில், ஆக்ரிதிக்கு திருமணம் ஆன நாள் முதல், கணவர் வீட்டார் அவரை வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூரமாக தாக்கி வந்ததாக கூறுகின்றனர். இதில் குறிப்பாக, ஆக்ரிதி காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருடைய கணவர் அரஸ்துவும், குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு, ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு அக்ரிதியை தொடர்ந்து துன்புறுத்தி, மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அரஸ்து “உன்னை கொன்று விடுவேன்” என ஆக்ரிதியை அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
ஆக்ரிதி இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர், கணவன் - மனைவிக்குள் வாக்குவாதம் நடந்ததாக, குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த அன்று மாலை 6 மணிக்கு கூட, ஆக்ரிதி தன்னுடைய தாயாரிடம் போனில் இயல்பாக பேசியதகவும், ஆனால் அடுத்த 2 மணி நேரத்தில் அவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கின்றனர். ஆக்ரிதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் வேளையில், சம்பவம் நடந்த அன்று ஆக்ரிதி, தங்களின் சக ஊழியர்களுக்கு விருந்து ஒன்றினை வைத்ததாகவும், அவர் மன ரீதியாக வலிமையானவர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். கொலையை மறைப்பதற்காக, அவர் தற்கொலை செய்து கொண்டதாக சித்தரிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். உண்மை என்ன என்பது, விசாரணை முடிந்த பின்தான் தெரியவரும்.