)
Delhi Dowry Murder: டெல்லி நொய்டாவில் நிக்கி என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தீவைத்து கொல்லப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணின் கணவனும், மாமியாரும் இணைந்து அந்த பெண்ணுக்கு தீ வைத்து கொன்றது அவனின் சிறு வயது மகன் நேரில் பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், உயிரிழந்த நிக்கியின் கணவன், மாமியார், மாமனார், மைத்துனர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கணவனை தேடி வந்த போலீசார் இன்று அவரை சுட்டுப்பிடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நிக்கி என்ற பெண்ணுக்கும், விபின் பாட்டி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டில் திருமணமாகி உள்ளது. திருமணமாகி 9 ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட, ரூ. 36 லட்சம் வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை கடுமையாக கொடுமைப்படுத்தி உள்ளனர்.
உயிரிழந்த நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சனும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்திருக்கிறார். நிக்கியின் கணவர் விபின் பாட்டியின் மூத்த சகோதரன் ரோஹித் பாட்டியை காஞ்சன் திருமணம் செய்துள்ளார். காஞ்சன்தான் தங்களுக்கு அக்குடும்பத்தில் இழைக்கப்பட்ட வரதட்சணை கொடுமைகளை பற்றி தற்போது வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு தங்களது தந்தை, அக்குடும்பத்திற்கு என்னென்ன பொருள்களை வரதட்சணையாக வழங்கினார் என்பது குறித்து காஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதில், "எனது தந்தை அவர்களுக்கு உயர் ரக ஸ்கார்பியோ SUV கார், ராயல் என்ஃபீல்ட் பைக், தங்கம், ரொக்கப்பணம் என அனைத்தையும் பரிசளித்தார். கர்வா சௌத் பண்டிகையை ஒட்டி பல பரிசுகளும் எங்கள் வீட்டில் இருந்து அனுப்பப்படும். எனது பெற்றோரால் முடிந்ததை அவர்கள் செய்தார்கள், ஆனால் மாமியார் வீட்டில் அது திருப்தியளிக்கவில்லை. தொடர்ந்து குறைக்கூறி வந்தனர்" என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
தனது கணவன் ரோஹித்தும் சரி, தங்கையின் கணவன் விபினும் சரி எப்போதும் இரவு தாமதமாகவே வீட்டிற்கு வருவார்கள் என்றும் தங்களின் மொபைல் அழைப்புகளையும் அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்றும் காஞ்சன் தெரிவித்தார். மேலும், "ஏதாவது கேள்விக் கேட்டால் அவர்கள் அதை பிரச்னையாக்குவார்கள். அவர்கள் வேறு பெண்களுடன் பழகுகிறார்கள், அதை நாங்கள் கூறினால் எங்களை அடிப்பார்கள். எங்களின் இரவுகள் அனைத்தும் அழுகையிலேயே சென்றுவிட்டது. இப்போது எல்லாம் போய்விட்டது, எனது தங்கையும் போய்விட்டால்... அவள் என்னை விட 2-3 வயது இளையவள். ஆனால் பலரும் என்னையும் அவளையும் இரட்டையர்கள் என நினைப்பார்கள்" என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "எனது தங்கை அழகு நிலையம் வைத்திருக்கிறார். ஆனால் அது எனது மாமியார் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. ஆனால் அவர்கள் அவளின் வருமானம் அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள். அதை தாண்டியும் எங்களை அடிப்பார்கள். நான் அந்த வீடியோவை எடுக்காவிட்டால் எனது தங்கை இறந்துவிட்டது யாருக்குமே தெரிந்திருக்காது. நான் தண்ணீரை ஊற்றி அவளை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் அவள் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துவிட்டாள்" என்றார்.
காஞ்சன் கொடுத்த புகாரின்பேரில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆக. 21ஆம் தேதி அன்று நிக்கி முதலில் அவரின் கணவர் விபின் மற்றும் மாமியார் தயா ஆகியோரால் தாக்கப்பட்டதாகவும், அதை தடுக்கச் சென்ற காஞ்சனையும் அவர்கள் அடித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபின் நிக்கியின் மீது எதையோ ஊற்றி, தீ வைத்திருக்கிறார். இந்த சம்பவத்தை காஞ்சன் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். காஞ்சன் எடுத்த வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. நிக்கி மீது தீப்பற்றி எரியும் வீடியோ, விபின் நிக்கியை தாக்குவது, தீப்பற்றி எரியும் நிக்கி படிக்கட்டுகளில் ஓடி வந்த வீடியோ, தீக்காயங்களுடன் நிக்கி படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் வீடியோ என பல்வேறு வீடியோ ஆதாரங்கள் சிக்கி உள்ளன. தற்போது விபின் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார், மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ