)
Cost For Stray Dog Sterilization: கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தெரு நாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. டெல்லி - தேசிய தலைநகர் பகுதியில் இருக்கும் மொத்த தெரு நாய்களையும் பிடித்து 8 வார காலத்திற்குள் தனியே ஓரிடத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நிதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்றது, இன்றும் பல்வேறு உத்தரவுகள் வந்துள்ளன.
அதில் முக்கியமான ஒன்று, தெருநாய்களை பிடித்து அவற்றுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்து ஆகியவை கொடுத்து அவற்றுக்கு கருத்தடை செய்த பின்னர், அந்த நாயை பிடித்த இடத்திலேயே மீண்டும் விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், இன்றைய தீர்ப்பு நாய் பிரியர்கள் மற்றும் தெருநாய்களை வெறுப்பவர்கள் மத்தியில் ஓரளவு சமாதானத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்றைய தீர்ப்பை நடைமுறைப்படுத்தப்போவது எப்படி என்ற சந்தேகமே பலதரப்பினரிடம் உள்ளது.
அதிலும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி என்பது அவ்வளவு எளிதானதும் அல்ல, விலை குறைவானதும் அல்ல. உதாரணமாக, டெல்லி - தேசிய தலைநகர் பகுதியதியில் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் குறைந்த விலையிலான கருத்தடையை செய்ய வேண்டும் என்றால், இதன் செலவு ரூ.2400 கோடியாகும். இந்த ரூ.2400 கோடி என்பது கருத்தடை தொடர்பானது மட்டும். அதாவது, அறுவை சிகிச்சை மற்றும் ஆபரேஷனுக்கு பின்னான சிகிச்சை ஆகியவற்றை உள்ளிடக்கியது.
அதேநேரத்தில், கருத்தடை செய்வது மட்டுமின்றி நாய்களை பிடிப்பதற்கான செலவு, கருத்தடை செய்வதற்கு தேவையான மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், கருத்தடை செய்வதற்கான மையங்கள் உள்ளிட்டவற்றின் செலவுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ரூ.2400 கோடியை இதன் செலவு தாண்டும். நிபுணர்களை பொறுத்தவரை ஆண் நாய்களுக்கும், பெண் நாய்களுக்கும் தனியே கருத்தடை செய்ய வேண்டும். ஆண் நாய்களுக்கும், பெண் நாய்களுக்கும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றாலும் செலவில் மாற்றம் இருக்கும். அதன் செயல்முறைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை ஆண், பெண் நாய்களில் வேறுபடும். அந்த வகையில், ஆண் நாய்களுக்கு கருத்தடை செய்ய எவ்வளவு செலவாகும், பெண் நாய்களுக்கு கருத்தடை செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை பார்ப்போம்...
பெண் நாய்களை பொருத்தவரை, பெண்ணுறுப்பு முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகே கருத்தடை செய்ய முடியும். கருத்தடைக்கான மொத்த கால அளவு 6 மாதம் ஆகும். அதாவது பெண் நாய்களுக்கு மூன்று கட்டங்களாக அது நடக்கும். முதல் கட்டத்தில், அந்த பெண் நாய் ரத்த பரிசோதனை உள்ளிட்டவையில் மருத்துவ ரீதியாக தகுதிபெற வேண்டும். பெண் நாய் கர்ப்பமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்ப்பார்கள்.
அதற்கு பிறகு ஆபரேஷன் செய்து அதன் கருப்பை மற்றும கருமுட்டைகள் அகற்றப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு காயத்திற்கு பேண்டேஜ் போடப்பட்டிருக்கும், ஆண்டிபயாடிக் சிகிச்சைக்கும் வழங்கப்படும் என்பதால், 10 நாள்கள் அல்லது அதற்கு மேல் கண்காணிப்பில் வைப்பார்கள். ஒரு பெண் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய 8-9 ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஆண் நாயை பொருத்தவரை, அதன் வயது 4 மாதங்கள் முதல் ஒன்றரை வயதாக இருக்கும் போது கருத்தடை செய்வதே சரியான தருணம் என்று கால்நடை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒன்றரை வயதிற்கு பிறகும் கருத்தடை செய்யலாம். பெண் நாய்களை போலவே இவற்றுக்கும் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஆண் நாய்க்கு அனைத்து மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அதில் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆண் நாய்களின் விதைப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு 3-5 நாள்களுக்கு நாய்கள் கண்காணிப்பில் வைக்கப்படும். ஆண் நாய்களுக்கு கருத்தடை செய்ய 3-5 ஆயிரம் ரூபாய் ஆகும் என்கிறார்கள். அதாவது பெண் நாய்களை விட ஆண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் செலவு குறைவுதான்.
ஆண் நாய்களுக்கும், பெண் நாய்களுக்கும் கருத்தடை செய்வது எந்தளவிற்கு முக்கியமோ, ஆபரேஷன் செய்த பின்னர் சில நாள்கள் அவற்றை கண்காணிப்பில் வைப்பதும் மிக மிக முக்கியம். ஆபரேஷன் செய்த அடுத்த நாளே மீண்டும் தெருக்களில் கொண்டுச் சென்றுவிட்டால் அவற்றின் உடல்நிலை மோசமாகக் கூட வாய்ப்புள்ளது. அவற்றுக்கு சில தொற்றுகளும் கூட ஏற்படலாம், இதனால் நோய் முற்றி அவை உயிரிழக்கும் வாய்ப்புகளும் அதிகம். மழைக்காலம் என்றால் தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும், தொற்றுக்கு பிறகு நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதும் செலவுகளை அதிகரிக்கும். எனவே, அறுவை சிகிச்கைக்கு பின் நாய்களை கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.
- தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்து அதனை மீண்டும் அதே இடத்தில் திரும்பி விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
- ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. நாய்களுக்கு கருத்தடை செய்ய செலவும் அதிகம்.
- ஆண் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையில் செலவாகும்.
- பெண் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையில் செலவாகும்.
- ஆனால் இவை வெறும் அறுவை சிகிச்சை மற்றும் அதற்கு பிறகான கண்காணிப்பு சார்ந்த செலவு மட்டுமே. இது இல்லாமல் இன்னும் இதில் பல செலவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ