Government Schemes Latest Update: இந்தியாவில் இருக்கும் பெண் குழந்தைகளின் நலன், கல்வி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குழந்தைக்கான ஐந்து திட்டங்களின் நோக்கம், பயன், விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

Girl Child Schemes In India: இந்தியாவில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 5 முக்கிய திட்டங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
லாட்லி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் பிறப்பு மற்றும் கல்விக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் சில மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். ஆனால் லாட்லி யோஜனா என்ற பெயரில் எந்தத் திட்டமும் தமிழ்நாட்டில் தற்போது இல்லை. ஆனால் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாட்டில் "முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" என்ற ஒரு சிறப்புத் திட்டம் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நோக்கம்: இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண் சிசுக்கொலையைத் தடுப்பது, பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிப்பது, அவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகியவை ஆகும்.
நிதியுதவி: ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் ரூ.10,000 அவர் பெயரில் டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும் பள்ளிப் படிப்பு முடியும் வரை வெவ்வேறு நிலைகளில் 18 வயது வரை நிதி உதவி கிடைக்கும்.
யார் சேர முடியும்: இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்கள். அதாவது இரண்டு பெண் குழந்தைகள் வரை உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: உங்கள் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பெற்றோர்கள் சேமிக்க உதவும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இது தமிழில் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது.
நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதி சேமிப்பை ஊக்குவிப்பது.
யார் விண்ணப்பிக்கலாம்: தகுதிகள்: 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கைத் திறக்க முடியும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்: ஆண்டுதோறும் ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
முதிர்வு காலம்: கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு கணக்கு முதிர்ச்சியடையும்.
வட்டி விகிதம்: தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் மத்திய அரசால் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படலாம்.
வரிச் சலுகை கிடைக்குமா?: இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது பெண்களுக்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இது 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது.
நோக்கம்: பெண்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவது.
யார் விண்ணப்பிக்கலாம்: அனைத்துப் பெண்களும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். வயது வரம்பு எதுவும் இல்லை. மைனர் பெண்களுக்காக அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கைத் திறக்கலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்: இதில் குறைந்தபட்ச ரூ.1000 முதல் அதிகபட்சமகா ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
முதலீட்டுக் காலம்: இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலம் 2 ஆண்டுகள் மட்டுமே.
வட்டி விகிதம்: முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டுக்கு 7.5% நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு கணக்கில் சேர்க்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தக் கணக்கு தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் திறக்கப்படுகிறது.
உதான் யோஜனா என்பது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தொடங்கிய ஒரு திட்டமாகும். இது இளம் மாணவிகளை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் சேர ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோக்கம்: பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்களைச் சேர்ப்பதாகும்
இலவச பயிற்சி: ஐஐடி, என்ஐடி போன்ற உயர்தரப் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிப்பது. பள்ளி மற்றும் உயர்கல்விக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதும் இத்திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
யார் சேரலாம்: இந்தத் திட்டம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே. அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் (அறிவியல் மற்றும் கணிதத்தில் 80%) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பொதுவாக cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும்.
சிபிஎஸ்இ மெரிட் உதவித்தொகை என்பது, தனிப்பட்ட பெண் குழந்தைக்கான உதவித்தொகைத் திட்டம் (CBSE Merit Scholarship Scheme for Single Girl Child) என அழைக்கப்படுகிறது. இது, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அவரின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) வழங்கப்படுகிறது.
நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பது, குறிப்பாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு நிதியுதவி அளிப்பது.
யார் சேரலாம்: ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும்.
தகுதிகள்: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வில் 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டும்.
உதவித்தொகை: இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு, 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புக்கு மாதம் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக மாணவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள், சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்கள் அவசியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ