)
Cyber Crime Alert: தற்போது அனைவரிடத்திலும் ஆண்ட்ராய்ட் மொபைல் வந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறீர்கள் என்றால் இப்போதெல்லாம் நான்கு பேரிடமும் வெவ்வேறு மொபைல்களை பார்க்க முடிகிறது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி 60 வயதான மூத்த குடிமக்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனர்.
யூ-ட்யூபில் சமையல் குறிப்புகளை பார்ப்பது, ஜோதிடர்கள் பேசுவதை கேட்பது, வாட்ஸ்ப் மற்றும் பேஸ்புக்கில் படிக்கும் போஸ்ட்கள் அனைத்தையும் குழுவில் பகிர்வது, இன்ஸ்டாவையும் விட்டுவைக்காமல் அதிலும் கணக்கை திறந்துவைத்து பயன்படுத்தாமல் இருப்பது, கல்யாண வீடுகளில் புகைப்படக்கலைஞர்களை தள்ளிவிட்டுக் கொண்டு தங்கள் மொபைலில் வீடியோ, போட்டோக்களை எடுப்பது என வயதானவர்களும் தொழில்நுட்பத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சைபர் கிரைம் மோசடிக்காரர்கள் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு விதமான வலையை விரித்தால் வயதானவர்களுக்கு வேறு விதமான வலைகளை விரிப்பார்கள் எனலாம். மாணவர்களை விட யார் எதை அனுப்பினாலும் அதனை உடனே பார்த்து, உடனே பதில் அனுப்பும் பழக்கம் வயதானவர்களுக்கு அதிகமுண்டு. அதை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் தங்களின் மாயஜாலத்தை நிகழ்த்தி மோசடி செய்தும் விடுகிறார்கள்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் சாதாரணமாக வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜை திறந்ததால் சுமார் ரூ.2 லட்சம் வரை இழந்து மோசடியில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறதே, யார் அனுப்பியிருப்பார்கள் என்ற ஆர்வத்தால் அவர் மோசடி வலையில் சிக்கிவிட்டார்.
மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அரசு ஊழியருக்கு தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ்அப்பில் ஒரு கல்யாண அழைப்பு பத்திரிகை வந்துள்ளது. அதாவது, அந்த மெசேஜில், "எங்களின் திருமணத்திற்கு வரும்படி அன்புடன் வரவேற்கிறோம்" என வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திருமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காதல் தான் மகிழ்ச்சி என்ற கதவை திறக்கும் மெய்யான சாவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மெசேஜிற்கு கீழ் ஒரு PDF ஆவணம் போன்று ஒரு APK File அனுப்பப்பட்டிருந்தது. அதன் பெயர் "திருமண அழைப்பிதழ்" என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. APK File என்றால் Android Application Package என அர்த்தம். இவர் அதை கல்யாண பத்திரிகையின் PDF என நினைத்து கிளிக் செய்துள்ளார். ஆனால், அந்த APK File தான் அவருக்கு ஆப்பு வைத்திருக்கிறது. அதாவது, அதை கிளிக் செய்ததும் மொபைல் ஹேக் செய்யப்பட்டு, அதில் இருந்து தனிப்பட்ட மற்றும் ரகசிய தரவுகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
அந்த அரசு ஊழியர் APK File-ஐ தொட்டதால் மொபைல் தரவுகளை திருடியது மட்டுமின்றி, அதன்மூலம் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தையும் திருடி உள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த அரசு ஊழியர் என்ன செய்வது என தெரியாமல் திணறி உள்ளார். தொடர்ந்து, ஹிங்கோலி காவல்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு பிரிவிலும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அடையாள தெரியாத நபருக்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, அந்த கல்யாண பத்திரிகை வடிவத்தில் வந்த APK File-ஐ தொட்டதும், அது அவரது மொபைலில் தரவிறக்கம் செய்யப்பட்டு விடும். இதற்கு பிறகு சைபர் குற்றவாளிகள், அந்த மொபைல் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள், இது பயனர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. உங்களின் மொபைலில் கிடைக்கும் தரவுகளை வைத்து, உங்களைப் போலே நடித்துக் கூட பிறரிடம் இருந்து பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே, வயதானவர்களும், இளைஞர்களும் சரி தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ், லிங்க், பைல்கள் என எது வந்தாலும் அதை கிளிக் செய்வதை தவிர்த்துவிடுங்கள். மேலும், பல வழிகளில் மோசடி நடக்கிறது என்பதால் யாரிடமும் உங்கள் மொபைலின் ரகசிய எண்ணை பகிர வேண்டாம். அனைத்திலும் ஜாக்கிரதையாக இருங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ