)
Indus Water Treaty: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நேற்று முன்தினம் (ஏப். 22) சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 முக்கிய அறிவிப்புகள்
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லக்சர் இ-தொய்பாவின் துணை அமைப்பான The Resistance Front பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானியர்களுடன் தொடர்பிருக்கும் காரணத்தால், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக 5 முக்கிய அறிவிப்புகளை இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புகள், பின்வருமாறு:
- சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) நிறுத்தி வைக்கப்படுகிறது.
- பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு SAARC விசாக்கள் இனி கிடையாது.
- பாகிஸ்தான் உடனான அடாரி - வாகா எல்லை மூடப்படுகிறது.
- பாகிஸ்தானில் உள்ள தனது தூதரகங்களில் இருந்து இந்தியா அதன் ஊழியர்களை திரும்பப் பெறுகிறது.
- SAARC விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களின் தற்போதைய விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
இந்த 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடுப்பட்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?, பாகிஸ்தானுக்கும் இந்த ஒப்பந்தத்திற்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்புகின்றனர். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று போடப்பட்டது. சுமார் 9 வருட பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் முகமது அயூப் கான் தலைமையில் இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக வங்கியும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டி பல நதிகள் ஓடுகிறது என்பதால், அவற்றின் நீரைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வழிமுறை இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் வகுத்தது எனலாம். மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
Indus Water Treaty: நதி நீர் பகிர்வு
கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நிதிகள் மூன்றாகும். அதில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின அனைத்தை நீரையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்தியாவின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நீர் பயன்பாட்டின் அளவு ஆண்டுக்கு சுமார் 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF) ஆகும். மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் பயன்பாட்டின் அளவு ஆண்டுக்கு சுமார் 135 MAF ஆகும்.
Indus Water Treaty: நீர்மின் திட்டங்கள்
இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு, மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் நதித் திட்டங்கள் மூலம் மின்சாரத்தை (Hydroelectricity) உற்பத்தி செய்யும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் இந்தியாவின் நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு குறித்து ஆட்சேபனைகளை எழுப்பவும் பாகிஸ்தானுக்கு உரிமை அளிக்கிறது.
Indus Water Treaty: ஆண்டுக்கு ஒருமுறை சந்திப்பு
இந்த ஒப்பந்தம் இரண்டு ஆணையர்களும் வருடத்திற்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்திக்க வேண்டும் என்று உத்தரவாதத்தை அளிக்கிறது. இதில் விதிவிலக்காக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதுடெல்லியில் நடைபெறவிருந்த கூட்டம் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ