)
தற்போது டெல்லி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தான். 74 வயதான ஜக்தீப் தன்கர், உடல்நலப் பிரச்சினைகளை காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனது உடல்நலன் மோசமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனை படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
#BreakingNews | Vice President Jagdeep Dhankhar resigns citing health reasons@VPIndia #JagdeepDhankhar #VicePresident pic.twitter.com/ZMrVrpEa4J
— DD News (@DDNewslive) July 21, 2025
ஜக்தீப் தன்கர் ராஜினாமாவுக்கான காரணங்கள்
தன்கர் தனது கடிதத்தில், இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவைச் சுட்டிக்காட்டி, உடல்நலக் காரணங்களால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் எதிர்கொண்ட உடல்நலப் பிரச்சினைகள் இந்த முடிவுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, மார்ச் மாதத்தில் டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இதயம் தொடர்பான பிரச்சினைக்காக சிகிச்சை பெற்றார். அதன் பின்னர், கடந்த மாதம் குமாவோன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது அவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இது போன்ற நிகழ்வுகள் அவரை இந்த முடிவை எடுக்க வைக்க காரணமாக அமைந்துள்ளன.
கடிதத்தில் முழு விவரம்!
ஜனாதிபதி முர்முவுக்கு ஜக்தீப் தன்கர் அனுப்பிய கடிதத்தில், தனது பதவிக்காலத்தில் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒத்துழைப்பு தனது பணியை சிறப்பாக்கியதாகவும், இந்த காலகட்டத்தில் பல மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற தன்கர், எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் அல்வாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவைத் தொடர்ந்து இந்த பதவியை அவர் ஏற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் இந்த ராஜினாமா சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்பு, மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றிய ஜக்தீப் தன்கர், அங்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக கவனம் பெற்றார். இந்திய துணை ஜனாதிபதி பதவியில் இருந்து பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்த மூன்றாவது நபராக தன்கர் பதிவாகியுள்ளார். 1969ஆம் ஆண்டு வி.வி. கிரி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தார். அதேபோல், 1987ல் ஆர். வெங்கடராமன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பதவி விலகினார். தன்கரின் விஷயத்தில், உடல்நலக் காரணம் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்கரின் ராஜினாமா, துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்த தூண்டியுள்ளது. அரசியமைப்பின்படி, இந்தக் காலியிடத்தை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும். புதிய துணை ஜனாதிபதி, பதவியேற்ற தேதியிலிருந்து முழு ஐந்தாண்டு காலத்தைப் பெறுவார் என துணை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல், அரசியல் கட்சிகளிடையே புதிய கூட்டணிகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தலைவர்கள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், பதவியைத் துறப்பது அரிதானது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ