)
Indian Army Dig At United States: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதான வரியை 25% ஆக அதிகரித்திருக்கும் இந்த சூழலில், இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.
தொடர்ந்து, இன்னும் வரியை அதிகரிப்பேன் என டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவும் ரஷ்யா உடனான தனது வர்த்த உறவு குறித்தும் நேற்றிரவு தெளிப்படுத்தியிருந்தது. இது இந்தியா - அமெரிக்கா உறவு மோசமாகியிருப்பதை உறுதி செய்தது எனலாம்.
இந்த சூழலில், அமெரிக்காவை தாக்கும் விதத்தில் 1971ஆம் ஆண்டு வெளியான நாளிதழின் புகைப்படம் ஒன்றை இந்திய ராணுவம் இன்று பகிர்ந்துள்ளது. அதாவது, 1971ஆம் ஆண்டுபாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கொடுத்து அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டிருப்பதாக மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் Eastern Command பிரிவு பகிர்ந்துள்ள அந்த செய்தித்தாள் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியில் வெளியானதாகும். சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் இன்றைய தேதியில் வெளியாகி உள்ளது. 1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் இருந்தது. அந்த காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் போட்ட பதிவில், "இன்றைய நாள், அந்த வருடம் போர் பதற்றம் உருவானது - 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5" என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த செய்தித்தாளில், "வங்கதேசத்தில் பாகிஸ்தானின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக நேட்டோ சக்திகளும் சோவியத் யூனியனும் எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டன என்பது குறித்து பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் வி.சி. சுக்லா மாநிலங்களவையில் பேசினார். சோவியத் யூனியனும் பிரெஞ்சு அரசும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்தாலும், அமெரிக்கா தனது ஆதரவைத் தொடர்ந்தது வழங்கியது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், அமெரிக்காவும், சீனாவும் மிகவும் மலிவான விலையில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளது. அதாவது, இந்தியாவுடனான 1971 வங்கதேச போரில், அமெரிக்காவின் ஆயுதங்களுடன்தான் பாகிஸ்தான் களமிறங்கியிருக்கிறது என்பது இங்கு தெளிவாகிறது. அமெரிக்கா இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பாரபட்சத்துடனும் செயல்படுகிறது என்பதை சொல்லும் விதமாக இந்தியா ராணுவம் இந்த செய்தித்தாளின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது என புரிந்துகொள்ளலாம்.
அமெரிக்கா அப்போது மட்டுமின்றி, இப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது. உலக நாடுகள் உடனான வர்த்தகத்தை மாற்றியமைக்கப்போவதாகவும், ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித் தனியாக வரி விதிக்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் அறிவித்திருந்தார். அமெரிக்காவுக்கு ஒரு நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவிற்கு அவர்களுக்கும் அமெரிக்கா வரி விதிக்கும் என தெரிவித்தார். இது Reciprocal Tariffs என பொதுவாக அழைக்கப்பட்டது. அதன்பின் அந்த வரி அறிவிப்பை நிறுத்திவைத்த டிரம்ப் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய வரி நடைமுறை அமலுக்கு வரும் என அறிவித்தார்.
அதன்படியே, இந்தியா மீதான வரியை 25% ஆக டிரம்ப் நிர்ணயித்தார். மேலும், 10% கூடுதல் அபராதம் விதிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதே வேளையில் முன்னர் பாகிஸ்தானுக்கு 29% ஆக இருந்த வரி தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதாலும், நீண்ட நாளாக நீடிக்கும் வர்த்தக தடைகளாலும் இந்தியா மீதான வரியை அதிகரிப்பதாக டிரம்ப் சொல்லியிருந்தார். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி அதனை வெளிச் சந்தையில் விற்பனை செய்கிறது என்பதால் இந்தியாவின் வரியை கணிசமாக உயர்த்துவேன் என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த கூற்றுக்கு இந்தியா நேற்றிரவே பதிலடி கொடுத்தது. உக்ரைன் - ரஷ்யா போர் வெடித்தபோது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதை அமெரிக்கா ஆதரிக்கவே செய்தது என்று இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கிய உடன் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கின என்றும் இதனால், உலகளவில் சந்தை சூழல் காரணமாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டாயம் இல்லாதபோதிலும் சில நாடுகள் ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்தது.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "2024ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா நாட்டுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள சரக்குகள் வர்த்தகத்தை கொண்டிருந்தது. கூடுதலாக, 2023ஆம் ஆண்டில் சேவைகளில் 17.2 பில்லியன் யூரோ மதிப்பிற்கு வர்த்தகத்தையும் கொண்டிருந்தது. இது அந்த ஆண்டு அல்லது அதற்கு பிறகான ரஷ்யா உடனான இந்தியாவின் மொத்த வர்த்தகத்தையும் விட அதிகம் எனலாம்" என குறிப்பிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக சாடி உள்ளது.
மேலும், ஐரோப்பா - ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு, இயந்திரங்கள், போக்குவரத்து உபகரணங்கள் ஆகியவை அடங்கும் என்றும் வெளியுறவுத்துறை அதில் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுகிறது என வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ