Indian Astronaut Shubhanshu Shukla Travel To Space: இந்தியா அதன் 2வது விண்வெளி வீரரை, விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1984ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையின் விங் கமாண்டராக இருந்த ரகேஷ் சர்மா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
Shubhanshu Shukla: நாளை தொடங்கும் விண்வெளி பயணம்
தற்போது 2வது விண்வெளி வீரராக குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார். இந்தியா, ரஷ்யா உடன் கைக்கோர்த்து ராகேஷ் சர்மாவை விண்வெளிக்கு அனுப்பிய நிலையில், சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தற்போது அமெரிக்காவின் நாசா உடன் கைக்கோர்த்துள்ளது. Indo-US Axion-4 மிஷன் மூலம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார். இந்த மிஷனுக்கு மற்றொரு பெயர் மிஷன் ஆகாஷ் கங்கா ஆகும். தொடர்ந்து, நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நாளை (ஜூன் 10) தனது விண்வெளி பயணத்தை தொடங்குகிறார்.
Shubhanshu Shukla: நம்பிக்கைகள், கனவுகளை சுமந்த பயணம்
சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்க உள்ளார். இதுகுறித்து சுக்லா கூறுகையில், "நான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்களை செலவிடத் தயாராகி வரும் நேரத்தில், அங்கு வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் என்னுடன் சுமந்து செல்கிறேன்" என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
Shubhanshu Shukla: யார் இந்த சுபான்ஷு சுக்லா?
சுபான்ஷு சுக்லா உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அன்று பிறந்துள்ளார். இவரது குடும்பத்தில் இந்திய ஆயுதப் படைகளில் சேர்ந்த முதல் நபரே இவர்தான். சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர்களான ஷம்பு தயாள் சுக்லா, ஆஷா ஆகியோர் அவரது இந்த நீண்ட வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். முதன்மையான தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து, சுபான்ஷு, கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் இணைந்துள்ளார்.
சுபான்ஷு சுக்லா கடந்த 2009ஆம் ஆண்டு பல் மருத்துவரான கம்னா சுக்லாவை திருமணம் செய்துள்ளார். சுபான்ஷு விண்வெளிக்குச் செல்ல உள்ளதை தொடர்ந்து கம்னா மற்றும் அவரது ஆறு வயது மகன் ஆகிய இருவரும் தற்போது அமெரிக்காவின் புளோரிடா நகருக்குச் சென்றுள்ளனர். சுபான்ஷுவின் இத்தனை வருட அனுபவத்தில் அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்துள்ளார். பூஜ், ஜோத்பூர் மற்றும் ஸ்ரீநகர் உட்பட பல இடங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் இந்த பணிக்காக அவரது பெயர் தேர்வு செய்யப்பட்டு அறிவித்தபோது அவர் பெங்களூருவில் இருந்துள்ளார்.
Shubhanshu Shukla: விண்வெளி பயணம் - குடும்பத்தினர் கூறுவது என்ன?
சுபான்ஷு விண்வெளிக்குச் செல்வது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், தாங்கள் இப்போதைக்கு கவலைப்படவில்லை என்றும் புறப்படும் தேதி நெருங்கும்போது பதற்றம் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் தங்களின் மகன் சவால்களைக் கண்டு அஞ்சுபவன் அல்ல என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். .
குறிப்பாக அவரது தாய் ஆஷா கூறுகையில், "இந்திய ஆயுதப் படைகளில் சேர விரும்புவதாக அவர் சொன்னபோது நாங்கள் ஆரம்பத்தில் பயந்தோம். அதன்பின், ரஷ்யாவில் விண்வெளி வீரராக ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சி பெற இருப்பதாக கூறியபோதும் நாங்கள் கவலைப்பட்டோம். முக்கியமாக அவர் ஒருபோதும் தனியாக எங்கும் செல்ல மாட்டார். ஆனால் அவர் சவால்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டார்" என்று பெருமையாக பேசினார். நிச்சயம் சுபான்ஷு சுக்லாவின் இந்த துணிச்சலான பயணம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமைதான்...
மேலும் படிக்க | ஹனிமூனில் கணவர் கொலை; மனைவியே கொன்றது அம்பலம்.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்!
மேலும் படிக்க | தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறை - மாற்றி அமைத்த ரிசர்வ் வங்கி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









