)
Karnataka Crime News: கர்நாடாக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூர் தாலுகாவில் அரசின் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசின் இந்த பள்ளியில் தற்போது பலரும் அதிர்ந்துபோகும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கர்நாடகாவின் அந்த உண்டு உறைவிட பள்ளியில் பயின்று வரும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக் கழிப்பறையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் இந்த சம்பவத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
இச்சம்பவம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கு வயது 17. பள்ளி வேலை நாள் அன்று அந்த மாணவி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த மாணவியின் நிலையை கண்ட சக மாணவிகள், உடனே பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியும், அந்த குழந்தையும் உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, 17 வயதான அந்த மாணவி நிறைமாத கர்ப்பணியாக இருந்துள்ளார். 9 மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபரால் அந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவி ஆவார். முதலில் பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாக அந்த மாணவி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. அன்று பள்ளி வேலை நாளின்போது கழிப்பறைக்குச் சென்ற அவருக்கு கடுமையாக வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கேயே எதிர்பாராத விதமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், தற்போது 28 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர்தான் மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிறகே என்ன நடந்தது?, அந்த இளைஞருடன் மாணவிக்கு தொடர்பு இருந்ததா? என்பது தெரியவரும் என மூத்த போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மட்டுமின்றி ஹாஸ்டல் வார்டன், பள்ளி முதல்வர், செவிலியர் மற்றும் மாணவியின் சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின்னரும் மாணவியின் நிலை குறித்து பள்ளி நிர்வாகமும், மாணவியின் சகோதரரும் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் இருந்தே மாணவி வகுப்பறைக்கு மிக குறைந்த நாள்களே வருகை தந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மாணவி கர்ப்பமாக இருந்தது தனக்கு தெரியவே தெரியாது என ஹாஸ்டல் வார்டன் கீதா சலிமணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி முதல்வரும் கூட, மாணவியை பார்க்கும்போது கர்ப்பமாக இருந்த அறிகுறியே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், கடமையை செய்ய தவறியதன் பொருட்டு பள்ளி முதல்வர், ஹாஸ்டல் வார்டன் உள்பட 4 பள்ளி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ