)
Bihar Assembly Election 2025, Tejashwi Yadav: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025 நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவ. 6) நடைபெறுகிறது.
பீகாரில் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு தேர்தல் நடைபெறுகிறது. மீதம் உள்ள 122 சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் நவம்பர் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து, நவம்பர் 14ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நாளை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. நேற்று பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சிகளும் தங்களின் பரப்புரையை முடுக்கிவிட்டன, பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசப்பட்டன.
அந்த வகையில், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் நேற்று கடைசி நாளில் ஒரு புதிய வாக்குறுதியை பெண்களுக்கு அதிரடியாக அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலின் கடைசி நாள் பரப்புரையில், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்தால் 'மை பஹின் மான் யோஜனா' நலத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ.30 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.300 என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஒரு குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.400 ஆக உயர்த்தப்படும் என்றும் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்தார். அதுமட்டுமின்றி, பாசனத்திற்கு இலவச மின்சாரத்தை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகா கூட்டணி தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், மை பாகின் மான் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளாக பதிவு செய்யும் பயனாளிகளுக்கு சரியாக ஜனவரி 14ஆம் தேதி மகர் சக்கராந்தி அன்று வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "நாங்கள் அறிவித்த 'மை பெஹென் மான் யோஜனா' திட்டத்திற்காக பல பெண்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த பணவீக்க நேரத்தில், இது அவர்களுக்கு பொருளாதார நிவாரணத்தை அளிக்கும் என்று கூறுகிறார்கள். எனவே நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கோரிக்கைகளின் பேரில், எங்கள் அரசாங்கம் அமைக்கப்படும் என்று நாங்கள் கூற விரும்புகிறோம்.
மகர சங்கராந்தியும் வரப்போகிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம், இது மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. இது ஜனவரி 14ஆம் அன்று வருகிறது, நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம், மேலும் மை பெஹென் மான் யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.30,000 டெபாசிட் செய்வோம், இது ஓராண்டு தொகையை ஒரே தவணையில் அளிப்பது போன்றது" என்று தேஜஸ்வி யாதவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதாவது, மாதம் ரூ.2,500 என வைத்துக்கொண்டால் வருடத்திற்கு ரூ.30 ஆயிரம் வரும். நம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை போல் ஒவ்வொரு மாதமும் தராமல், ஓராண்டு தொகையான ரூ.30 ஆயிரத்தை ஒரே தவணையில் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியின் உதவியுடன் பீகார் கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (BRLP) கீழ் மாநிலத்தின் ஜீவிகா தீதிகளுக்கு பயனளிக்கும் திட்டத்தை கொண்டுவருவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். அதில் அவர், "அரசின் உத்தரவின் பேரில் இரவும் பகலும் உழைக்கும் ஜீவிகா தீதிகளுக்கு, நாங்கள் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்குவோம் என்று நாங்கள் முன்பே தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதோடு, பெண்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டியை நாங்கள் தள்ளுபடி செய்வோம். பெண்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் மேலும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ