தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், மகாராஷ்டிர மாநில அரசு வருகின்ற 2026-27 கல்வியாண்டு முதல் Honours மற்றும் Honours with Research ஆகிய சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. உயர்கல்வி துறையில் ஒரே மாதிரியான மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறையை கொண்டு வரும் நோக்கில் இந்த மாபெரும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய 4 ஆண்டு கட்டமைப்பு
மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, இந்த நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு ஒட்டுமொத்தமாக 8 செமஸ்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று ஆண்டுகளை, அதாவது 6 செமஸ்டர்களை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், தங்களது விருப்பத்தின் அடிப்படையில் வழக்கமான இளங்கலை பட்டத்துடன் கல்வியை முடித்துக்கொள்ளலாம். கல்வியை மேலும் தொடர விரும்பும் மாணவர்கள், நான்காம் ஆண்டான 7 மற்றும் 8-வது செமஸ்டர்களில் Standard Honours அல்லது Honours with Research ஆகிய இரண்டு பிரத்யேக தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
ஹானர்ஸ் படிப்பிற்கான தகுதிகள்
நான்கு ஆண்டு இளங்கலை ஹானர்ஸ் படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், தங்களது நான்கு ஆண்டு படிப்புக்காலத்தில் ஒட்டுமொத்தமாக 160 முதல் 176 வரையிலான கல்வித் தரப்புள்ளிகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், இந்த ஹானர்ஸ் படிப்பில், மாணவர்கள் தங்களது இறுதியாண்டில் 4 கல்வித் தரப்புள்ளிகளை கொண்ட Internship பயிற்சியை கட்டாயமாக முடிக்க வேண்டும். இந்த பயிற்சியானது மாணவர்களுக்கு நேரடியான செய்முறை அறிவையும், துறை சார்ந்த வேலைவாய்ப்பு திறன்களையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி பட்டத்திற்கான விதிமுறைகள்
ஆராய்ச்சிப் பிரிவான ஹானர்ஸ் வித் ரிசர்ச் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், முதல் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதியை பெற்ற மாணவர்கள், தங்களது இறுதியாண்டில் 12 கிரெடிட்களை கொண்ட ஒரு விரிவான ஆராய்ச்சித் திட்டம் அல்லது ஆய்வுக் கட்டுரையை தங்களது முதன்மை பாடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உலகளாவிய கல்வி தரத்திற்கு இணையான ஆராய்ச்சி திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கத்திலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நான்காம் ஆண்டிற்கான நுழைவு தகுதிகள்
இளங்கலை படிப்பின் நான்காம் ஆண்டில் நுழைவதற்கு, மாணவர்கள் முதல் மூன்று ஆண்டுகளில் 120 முதல் 132 கல்வித் தரப்புள்ளிகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும் என மகாராஷ்டிர உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சமான, எப்போது வேண்டுமானாலும் கல்வியில் இருந்து வெளியேறவோ அல்லது மீண்டும் இணையவோ வசதியாக Academic Bank of Credits - ABC தளத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி, காலியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், மாணவர்கள் நான்காம் ஆண்டில் வேறு கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாறுவதற்கும் இந்த அரசாணை அனுமதி அளிக்கிறது.
கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள்
இதுவரை மூன்று ஆண்டு இளங்கலை படிப்புகளை மட்டுமே வழங்கி வந்த கல்லூரிகள், புதிய நான்கு ஆண்டு திட்டத்தை தொடங்க அரசிடம் கட்டாயம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால், ஏற்கெனவே முதுகலை படிப்புகளை வழங்கி வரும் கல்லூரிகள் எவ்வித கூடுதல் அனுமதியுமின்றி தானாகவே நான்காம் ஆண்டு ஹானர்ஸ் படிப்பை தொடங்கிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட பிஎச்டி ஆராய்ச்சி மையங்களை கொண்ட கல்லூரிகள், ஆராய்ச்சி ஹானர்ஸ் படிப்பை நேரடியாக வழங்க முடியும் எனவும், ஒவ்வொரு பிஎச்டி வழிகாட்டியும் 5 மாணவர்களை மட்டுமே ஆராய்ச்சிக்கு வழிநடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு முறை மற்றும் ஆன்லைன் வகுப்புகள்
இந்த நான்கு ஆண்டு படிப்பிற்கான தேர்வுகள் செமஸ்டர் அடிப்படையில் நடைபெறும்; மாணவர்களின் திறனை மதிப்பிடுவதற்கு தொடர்ச்சியான அகமதிப்பீடு மற்றும் செமஸ்டர் இறுதி தேர்வுகள் என இரண்டு முறைகளும் பின்பற்றப்படும். தேர்வு முறைகளை வடிவமைத்துக்கொள்ளும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கே முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளின்படி, ஒரு செமஸ்டரில் உள்ள பாடங்களில் 40 சதவீதம் வரை SWAYAM போன்ற ஆன்லைன் கல்வி தளங்கள் மூலமாக படிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், மகாராஷ்டிராவின் உயர்கல்வித் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதோடு, மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான கல்வி அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. மகாராஷ்டிராவின் 4 ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு எப்போது தொடங்குகிறது?
மகாராஷ்டிராவில் புதிய 4 ஆண்டு UG (Honours / Honours with Research) படிப்புகள் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) படி 2026–27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்.
2. 3 ஆண்டுக்கு பிறகு வெளியேற முடியுமா?
மாணவர்கள் முதல் 3 ஆண்டுகள் (6 செமஸ்டர்கள்) முடித்த பிறகு விருப்பமிருந்தால் சாதாரண இளங்கலை (Regular UG Degree) பட்டத்துடன் வெளியேறலாம்; 4ஆம் ஆண்டைத் தொடருபவர்களுக்கு தான் Honours அல்லது Honours with Research பட்டம் வழங்கப்படும்.
3. ‘Honours’ மற்றும் ‘Honours with Research’ வித்தியாசம் என்ன?
Honours எடுத்தால் மெய்ஜர் பாடத்தை ஆழமாகப் படித்து தேவையான கிரெடிட் + இன்டர்ன்ஷிப் முடிக்க வேண்டும்; Honours with Research எடுத்தால் குறைந்தபட்சம் 7.5 CGPA வைத்திருப்பவர்கள் 12 கிரெடிட் மதிப்புள்ள பெரிய ஆராய்ச்சி திட்டம்/திஸர்டேஷன் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









