Meghalaya Honeymoon Murder: ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் புதுமண தம்பதியர் ஆவர். இவர்கள் கடந்த 23ஆம் தேதி கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள சிரப்புஞ்சிக்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர்.
மே 22ஆம் தேதி மேகாலயாவின் நோங்ரியாட் பகுதிக்கு இந்த தம்பதியர் சென்றுள்ளனர். கடைசியாக அங்குள்ள பாலாஜி ஹோம்ஸ்டேவில் இவர்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் அங்கு ஒரு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
Meghalaya Honeymoon Murder: காணாமல் போன புதுமண தம்பதி
இவர்கள் காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு அந்த வாடகை ஸ்கூட்டர் சொஹ்ராரிம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஜோடியை போலீசார் தீவிரமாக தேடினர். இவர்களை யாரும் கடத்திவிட்டார்களா உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பலரும் ஷாக் ஆகும் வகையில் 10 நாள்கள் கழித்து ராஜா ரகுவன்ஷியின் உடல் மேகாலயாவின் ரியாட் அர்லியாங் பகுதியில் உள்ள வெய்சாவ்டோங் வாகன நிறுத்துமிடத்திற்கு கீழே உள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையின்போது, அந்த தம்பதியனர் காணாமல் போன அன்று 3 ஆண்டுகளுடன் இருந்ததை பார்த்ததாக சுற்றுலா வழிகாட்டி (Tourist Guide) ஒருவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருந்தார். மேகாலயாவின் மவ்லகியாத் கிராமத்தின் சுற்றுலா வழிகாட்டி தெரிவித்த தகவலின்படி, மே 23ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நோங்ரியாட் முதல் மவ்லகியாத்திற்கு 3000 ஸ்டெப்ஸ் மலையேறி உள்ளனர்.
Meghalaya Honeymoon Murder: மேகாலயாவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு
மே 22ஆம் தேதி அன்று நோங்ரியாட்டில் இருந்து இறங்கும்போது சுற்றுலா வழிகாட்டுதலுக்கு அந்த தம்பதியிடம் தான் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் பணிவுடன் மறுத்துவிட்டு வேறொரு வழிகாட்டியுடன் சுற்றுலா சென்றதாகவும் அவர் தகவல் தெரிவித்திருந்தார். இதன்மூலமே, அவர்களை அடையாளம் தெரிந்ததாகவும் கூறினார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி சடலமாக கண்டெடுக்கப்பட்டாலும் அவரது மனைவி சோனம் மாயமாகவே இருந்தார். இந்த வழக்கு மேகாலயாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் இருந்து ஹனிமூனுக்கு மேகாலயா வந்த சுற்றுலா பயணிகள் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து விசாரணையும் தீவிரமானது.
Meghalaya Honeymoon Murder: மனைவி இன்று கைது
இந்நிலையில், அவரது மனைவி சோனத்தை போலீசார் இன்று (ஜூன் 9) கைது செய்துள்ளனர். மேலும் அவர்தான் அவரது கணவரை கொலை செய்துள்ளார் என்றும் போலீசார் குற்றஞ்சாட்டி உள்ளனர். மனைவி சோனம்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்து அவரது கணவரை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு உத்தரபிரதேசத்தின் காசிபூர் நகரின் தாபாவில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து, காசிபூர் மருத்துவக் கல்லூரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னரே அவர் போலீசாரிடம் சரணடைந்தார்.
Meghalaya Honeymoon Murder: போலீசார் கூறியது என்ன?
இதுகுறித்து மேகாலயா டிஜிபி இடஷிஷா நோங்ராங் கூறுகையில், "இரவு முழுவதும் நடந்த சோதனைகளில் மேலும் மூன்று குற்றவாளிகளை கைது செய்தோம். ஒருவர் உத்தரபிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மற்ற இருவரும் இந்தூரில் கைது செய்யப்பட்டனர். தனது கணவரை கொல்ல சோனம் தங்களை வேலைக்கு அமர்த்தியதாக கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்" என்றார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கை தீர்த்துவைத்ததாக காவல்துறையினருக்கு மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் X பக்கத்தில், "7 நாட்களுக்குள், ராஜா கொலை வழக்கில் மேகாலயா காவல்துறையினரால் ஒரு பெரிய திருப்புமுனை எட்டப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பெண் சரணடைந்துள்ளார். மேலும் ஒரு குற்றவாளியைப் பிடிக்க இன்னும் நடவடிக்கை தொடர்கிறது... வாழ்த்துக்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
Meghalaya Honeymoon Murder: திருமணத்தை மீறிய உறவா...?
சோனம், ராஜ் குஷ்வாஹா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அவருடன் சேர்ந்துதான் தனது கணவரைக் கொல்ல சோனம் சதி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹனிமூன் சென்ற இடத்தில் இந்த சதி திட்டத்தைச் செயல்படுத்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கூலிப்படையை சோனம் ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
Meghalaya Honeymoon Murder: பெண்ணின் தந்தை வைக்கும் குற்றச்சாட்டு
இருப்பினும் சோனமின் தந்தை தேவி சிங், மேகாலயா போலீசார் பொய் தகவல்களை கூறி வழக்கை திசைத்திருப்புவதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் கூறுகையில், "என் மகள் அப்பாவி. நான் அவளை முழுமையாக நம்புகிறேன். அவளால் இதைச் செய்ய முடியாது. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேகாலயா அரசு ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்லி வருகிறது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.
"நேற்று நள்ளிரவு உத்தரபிரதேச மாநிலம் காசிபூரில் உள்ள ஒரு சாலையோர உணவகத்திற்கு சோனம் தனியாகச் சென்று தனது சகோதரனை தொலைப்பேசியில் அழைத்துள்ளார். அதன் பிறகு போலீசார் வந்து அவளை அழைத்துச் சென்றுள்ளனர். மேகாலயாவில் அவள் கைது செய்யப்படவில்லை. அவள் தனியாக காசிபூருக்கு வந்துள்ளார். இன்னும் அவளிடம் பேச முடியவில்லை. என் மகள் ஏன் அவளது கணவனைக் கொல்ல வேண்டும்? மேகாலயா காவல்துறை பொய் சொல்கிறது," என்றும் தந்தை குற்றஞ்சாட்டினார்.
Meghalaya Honeymoon Murder: சிபிஐ விசாரணை
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றும் சிபிஐ விசாரணை தொடங்கியதும் மேகாலயாவின் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் சோனமின் தந்தை தேவி சிங் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Meghalaya Honeymoon Murder: 'சோனம் அதை செய்திருக்க வாய்ப்பில்லை'
மேலும் ராஜா ரகுவன்ஷியின் சகோதரன் விபுல் என்பவரும் சோனம் இந்த கொலையை செய்திருக்க மாட்டார் என வாதிடுகிறார். மேகலாயா போலீசார் கூறுபவை அனைத்தும் பொய் என கூறும் அவர், "நான் அதிகாலை 2 மணியளவில் கோவிந்திடம் (சோனமின் சகோதரர்) பேசினேன். சோனம் உத்தரபிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் என்னிடம் சொன்னார். நாங்கள் உத்தர பிரதேச போலீசாரை தொடர்புகொண்ட பிறகு, சோனமை போலீசார் அழைத்துச் சென்றனர். அவள் சரணடையவில்லை. அவள் இதை ஒப்புக்கொள்ளும் வரை சோனம் தான் குற்றவாளி என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். ராஜாவும், சோனமும் மகிழ்ச்சியாகவே இருந்தனர்" என்றார். இதன்மூலம் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறை - மாற்றி அமைத்த ரிசர்வ் வங்கி!
மேலும் படிக்க | தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு போராட்டம் - மணிப்பூரில் மீண்டும் வன்முறை... ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









