Mehul Choksi Arrested: நீண்ட காலமாக சிக்காமல் இந்தியாவுக்கு தண்ணீர் காட்டி வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ இன்று உறுதி செய்துள்ளது. கடந்த சனிக்கிழமையே அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mehul Choksi: ரூ.13,500 கோடிக்கும் மேல் மோசடி
இவருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் இரண்டு பிடி வாரண்ட்கள் கடந்த 2018ஆம் ஆண்டு மே23ஆம் தேதியும், 2021ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியும் பிறப்பிக்கப்பட்டது. இவரை நீண்ட காலமாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரபல வைர வியாபாரியும், இந்தியாவை விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடியின் மருமகன்தான் இந்த மெகுல் சோக்சி. நாட்டின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் ரூ.13,500 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
Mehul Choksi: மெகுல் சோக்ஸி செய்த மோசடி என்ன?
பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மெகுல் சோக்ஸி மீது மட்டுமின்றி நீரவ் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீது குற்றவியல் புகாரை அளித்திருந்தது. இந்த வழக்கில்தான் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை நீண்ட காலமாக தேடி வருகிறது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களின் ஒப்பந்தக் கடிதங்கள் (LoUs) மற்றும் வெளிநாட்டு கடன் கடிதங்கள் (FLCs) ஆகியவற்றைப் மோசடியாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
Mehul Choksi: ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் குடிமகன்
இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததும் 2018ஆம் ஆண்டு நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். மெகுல் சோக்சி ஐரோப்பாவில் ஒளிந்திருப்பது சில மாதங்களுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்தது. இவரது மோசடி குறித்த ஆவணங்களை இந்திய முகமைகள், பெல்ஜியம் போலீசாருக்கு அனுப்பிவைத்தன. அதன் அடிப்படையிலேயே பெல்ஜியம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இவரின் மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் நாட்டின் குடியுரிமையை பெற்றிருக்கிறார். மெகுல் சோக்சி இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் குடியேறினார், அங்கு குடியுரிமையும் பெற்றார்.
Mehul Choksi: மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள்
அதன்பின் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக அந்நாட்டில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அன்டிகுவாவில் இருந்து தலைமறைவான மெகுல் 2021இல் மற்றொரு கரீபியன் தீவு நாடான டொமினிகாவில் தென்பட்டதாக கூறப்பட்டது.
மெகுல் சோக்ஸி போன்ற தேடப்படும் நபர்களின் கடன்களை அடைக்க ரூ.2,565.90 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன அல்லது விற்கப்பட்டுள்ளன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும், காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றங்களில் ஆஜராகவும் மெகுல் சோக்சி தயாராக இருந்தார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் அவரை நாடு கடத்தும் நோக்கில் அரசு முகமைகள் தொடர்ந்து பணியாற்றி வந்தன. இந்த முயற்சிகள் இப்போது அவரது கைதுக்கு வழிவகுத்துள்ளன.
மேலும் இந்திய அதிகாரிகள் இப்போது அவரை மீண்டும் விசாரணைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெகுல் சோக்ஸியின் சட்ட வல்லுநர்கள் குழு, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வதாகவும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 15000 கோடி அம்பானி வீட்டில் 1 ஏசி இல்லையா? ஆச்சரியமான உண்மை..
மேலும் படிக்க | அத்தையின் தங்கச்சி மீது காதல்... குறுக்கே வந்த மாமா... போட்டுத்தள்ளிய மருமகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ