)
Google AI and Data Centre: கூகுள் நிறுவனம் அதன் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பிரம்மாண்டமான ஏஐ மற்றும் டேட்டா மையத்தை இந்தியாவில், அதுவும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது.
ஒங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத்தை, தகவல் தொழில்நுட்பத்துறையில் நாட்டின் முதன்மை நகரமாக மாற்றிய பெருமை எப்போதும் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையே சேரும். தற்போதைய ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு பெரிய முதலீடாக கூகுள் வந்திருக்கும் நிலையில், இதன் பெருமை அனைத்தும் ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷுக்கு சொந்தமாகியுள்ளது.
ஆந்திராவுக்கு கூகுள் ஏஐ மற்றும் டேட்டா மையம் வந்ததில் இருந்து அவரை கையிலேயே பிடிக்க முடியவில்லை எனலாம். கடந்த அக். 16ஆம் தேதி அன்று அவர் போட்ட X பதிவில், "ஆந்திர உணவு காரமானது என்கிறார்கள். எங்கள் சில முதலீடுகளும் அப்படித்தான். சில அண்டை மாநிலங்கள் ஏற்கெனவே காரத்தை உணர்ந்துவிட்டார்கள்" என பதிவிட்டிருந்தார். அவர் சொல்லியது போல் கூகுள் ஏஐ மையம் குறித்து கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் சில சலசலப்புகளை உணர முடிந்தது.
தமிழ்நாட்டை பொருத்தவரை, சட்டப்பேரவையிலேயே திமுக - அதிமுக இடையே இந்த கூகுள் ஏஐ மையத்தை வைத்து விவாதம் நடந்தது. அதில், சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏன் ஆந்திராவை தேர்வு செய்தார் என அதிமுக கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு, "கூகுள் நிறுவனம் ஆந்திராவிற்குச் சென்றதன் பின்னணியில் அதானியின் தலையீடு இருக்கிறது, பக்கத்து மாநில முதலீட்டைக் குறைசொல்ல விரும்பவில்லை" என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று ஆங்கில செய்தி ஊடகம் இதுகுறித்து விவாதம் நடத்தியது. அதில், சுந்தர் பிச்சை தமிழர், ஆனாலும் அவர் ஆந்திராவையே தேர்ந்தெடுத்தார் என்ற அதிமுகவின் கூற்றை ஒளிப்பரப்பினார்கள். இன்று மதியம் அதன் புகைப்படத்தை பகிர்ந்த நாரா லோகேஷ், "அவர் (சுந்தர் பிச்சை) பாரதத்தை தேர்வு செய்துள்ளார்" என பதிவிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா என இல்லாமல் அவர் இந்தியாவை தேர்வு செய்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கூகுள் நிறுவனத்தின் முதலீட்டு அறிவிப்பை தொடர்ந்து ஆந்திராவுக்கும், கர்நாடாகவும் சில நேரடி கருத்து மோதல்களை பார்க்க முடிந்தது. கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே - ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
குறிப்பாக, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் குழிகள் நிறைந்த சாலைகள் காரணமாக தனது அலுவலகத்தை பெங்களூருவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த வணிக உரிமையாளர் ராஜேஷ் யபாஜி கூறிய கருத்துகள்தான் இருவரின் கருத்து மோதல்களுக்கு காரணமாக இருந்தது.
வரி மற்றும் பயன்பாட்டு சலுகைகள் உட்பட ரூ.22,000 கோடி இலவச சலுகைகளை வழங்கி கூகுளின் முதலீட்டை பெற்றதாக பிரியங்க் கார்கே, நாரா லோகேஷ் மீது குற்றஞ்சாட்டினார். அதற்கு லோகேஷ், "அவர்கள் (கர்நாடக அரசு) திறமையற்றவர்களாக இருந்தால், நான் என்ன செய்ய முடியும்? அவர்களின் சொந்த தொழிலதிபர்கள் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதாக கூறுகிறார்கள்... அவர்கள் முதலில் அந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்" என்று கூறியது கவனிக்கத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ