)
NEET Exam Paper Leak Case Latest Updates : நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வு வினாத்தாளை கசியவிட்டதில் முக்கிய புள்ளியாக கருதப்படும், புனேவை சேர்ந்த ஆசிரியர் பி.வி. குல்கர்னி என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர் நடத்தி வந்த ரகசிய டியூஷனில்தான் பல மாணவர்களுக்கு வினாத்தாள் கசிந்துள்ளது என சிபிஐ குற்றஞ்சாட்டி உள்ளது.
கைதானது எப்போது? : பி.வி. குல்கர்னி மற்றும் அவரது கூட்டாளி என கருதப்படும் மனிஷா வாக்மரேவை போலீசார் கடந்த வியாழன் அன்று கைது செய்தனர்.
NTA உடன் தொடர்பு என்ன? : நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் சார்பில் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். தேசிய தேர்வு முகமை கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள், குல்கர்னியின் கைகளுக்கு முன்பே கிடைத்திருக்கிறது என்றும் சிபிஐ நேற்று (மே 15) தெரிவித்திருந்தது.
யார் இந்த குல்கர்னி? : சிபிஐ அளித்த தகவல் என PTI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நீட் தேர்வின் தேர்வு தாளை தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த குழுவில் பி.வி. குல்கர்னி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குல்கர்னி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் ஆவார். வேதியியல் பேராசிரியரான இவர் ராஜ் கோச்சிங் கிளாசஸ் (Raj Coaching Classes) என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் டியூஷன் வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.
லீக் ஆனது எப்போது? : இளநிலை நீட் தேர்வின் வினாத்தாளை குல்கர்னி தனது டியூஷன் மாணவர்களுக்கு விடையுடன் லீக் செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரில், குல்கர்னி தனது வீட்டில் ரகசியமாக இந்த டியூஷனை நடத்தி வந்துள்ளார். இந்த டியூஷன் வகுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி கட்டத்தில் நடந்திருப்பதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
சிபிஐ வெளியிட்ட அறிவிப்பு : "சிறப்பு டியூஷன் வகுப்புகளின் போது, கேள்விகளையும், அந்த கேள்விகளுக்கான மல்டிபிள் சாய்ஸ் ஆப்ஷன்களையும், சரியான விடைகளையும் மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். அதை மாணவர்கள் தங்களின் நோட்டுகளில் குறிப்பெடுத்துள்ளனர். மே 3ஆம் தேதி அன்று நடந்த இளநிலை நீட் தேர்வில் அதே கேள்விகள், வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன" என சிபிஐ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை வைத்தே சிபிஐ இவர்தான் வினாத்தாள் கசிந்ததில் முக்கிய புள்ளி என கண்டுபிடித்துள்ளது.
யார் அந்த மனிஷா வாக்மரே? : குல்கர்னியின் இந்த சிறப்பு டியூஷன் வகுப்புகளுக்கும் மனிஷாவுக்கும் உள்ள தொடர்பையும் சிபிஐ தெரிவித்துள்ளது. பியூட்டி பார்லர் நடத்தி வரும் மனிஷா, தேர்வுக்கான வினாத்தாளை லீக் செய்வதாகவும், கல்லூரியில் அட்மிஷன் வாங்கித் தருவதாகவும் கூறி, மாணவர்களிடம் பணம் வசூலித்துள்ளார். ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து, அதை குல்கர்னியிடம் அளித்துள்ளார்.
பல இடங்களில் ரெய்டு : நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் சிபிஐ பல இடங்களில் சோதனைகளை நடத்தி உள்ளது. பல முக்கிய ஆவணங்கள், மொபைல்கள், மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தடயவியல் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது இந்த வழக்கில் மேலும் பல சாட்சியங்கள் கிடைத்துள்ளன.
வழக்குப்பதிவு : கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள, உயர்க்கல்வித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த செவ்வாய் கிழமை (மே 12) நீட் வினாத்தாள் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணையைத் தொடங்க சிபிஐ உடனடியாக சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.
8 பேர் கைது : ஜெய்ப்பூர், நாசிக், அஹில்யநகர், குருகிராம், புனே ஆகிய நகரங்களில் இருந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் நேற்று முன்தினம் (மே 14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 7 நாள்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
ஜூன் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடைபெறுகிறது. புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, கூடுதல் கட்டணமும் தேவையில்லை.