)
Miss World 2025 Winner Opal Suchata: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025 போட்டியின் இறுதிச்சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இந்நிலையில், 2025ஆம் ஆண்டின் உலக அழகியாக தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) மகுடம் சூடினார்.
Miss World 2025: உலக அழகிக்கான பரிசு தொகை எவ்வளவு?
72வது உலக அழகி போட்டித் தொடரின் (Miss World 2025) இறுதிச்சுற்றில் பங்கேற்க 120 நாடுகளின் அழகிகளும் ஹைதராபாத் நகருக்கு கடந்த மே முதல் வாரத்தில் வந்தடைந்தனர். தொடர்ந்து அவர்கள் பல சுற்று போட்டிகளிலும், விளம்பர நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்த நிலையில், நேற்றுதான் (மே 31) இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் மிஸ் தாய்லாந்தான ஓபல் சுச்சாட்டா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, உலகி அழகி பட்டத்தை கடந்தாண்டு வென்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, ஓபல் சுச்சாட்டாவுக்கு வெற்றியாளருக்கான கிரீடத்தை சூடினார். இதில் பட்டம் வென்ற ஓபல் சுச்சாட்டாவுக்கு இந்திய மதிப்பில் ரூ.8.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
Miss World 2025: கவனம் பெற்ற ஓபலின் ஆடை
அவர் இறுதிப்போட்டியில் அணிந்திருந்த வெள்ளை நிற கவுன் சிறப்பான கவனத்தை பெற்றது. ஓபல் என்பது ஒரு வகை ரத்தின கல். இவரது பெயரும் ஓபல்தான். இந்த உயரத்தை எட்ட அவர் பயணத்தை குறிக்கும் வகையிலும், ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் தனது கருத்தை சமர்பிக்கும் வகையிலும் "Opal For Her" என கருப்பொருளை குறிக்கும் வகையில் அவரது ஆடை இருந்தது.
ஓபல் சுச்சாட்டா அணிந்திருந்த ஆடை குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "மின்னும் வெள்ளைத் துணியும், மென்மையான ஓபல் போன்ற மலர்களும் பயத்தை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களை பிரதிபலிக்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓபல் அணிந்திருந்த ஆடை வெறும் ஆடையல்ல, அது ஒரு குறியீடு. கடும் துன்பங்களை எதிர்கொண்டாலும் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணின் கொண்டாட்டமாகவும் அந்த ஆடை இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த இன்ஸ்டா பதிவில், "ஓபலை போலவே (இரத்திக்கல்லை போல), நான் என் சொந்த ஒளியில் பிரகாசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Miss World 2025: மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டவர்
குறிப்பாக, ஓபல் சுச்சாட்டா இந்த Opal For Her முன்னெடுப்பை நாடு தழுவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மேற்கொண்டார். மார்பகப் புற்றுநோய் குறித்த கல்வி, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், அதற்கான சக்தியை கொடுப்பது ஆகியவையே விழிப்புணர்வின் நோக்கமாக இருந்தது. ஓபல் இந்த விழிப்புணர்வை முன்னெடுத்ததற்கு முக்கிய காரணம், அவரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதுதான். இருப்பினும், அவர் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதால் அதில் இருந்து பூரணமாக குணமடைந்துவிட்டார்.
Miss World 2025: விழிப்புணர்வுக்கான காரணம்
எனவேதான் அவர் பெண்களிடம் அதுவும் குறிப்பாக இளம்பெண்களிடம் ஆரம்பக் கல்வியை தீவிரமாக ஆதரிக்கிறார். மேலும், மார்பக பிரச்சினைகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. அவை உடனடியான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இது பதின் பருவ சிறுமிகள் உட்பட யாரையும் பாதிக்கலாம் என்பதால் அதுகுறித்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
மேலும், ஓபல் சுச்சாட்டா மருத்துவ மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அதன்மூலம் சமூக நன்மைக்காக புதிய முயற்சிகளைத் தொடங்கி அதனை விரிவுபடுத்த ஓபல் திட்டமிட்டுள்ளார். பயத்தினாலும், சரியான பராமரிப்பு கிடைக்காததாலும் எந்தவொரு பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே அவரது குறிக்கோள் என்கிறார்.
Miss World 2025: அடுத்தடுத்த பரிசுகள் யார் யாருக்கு...?
1996ஆம் ஆண்டு, 2024ஆம் ஆண்டு ஆகிய இரண்டு முறை உலக அழகி தொடர் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் மூன்றாவது முறையாக இந்தியாவிலும், முதல்முறையாக ஹைதராபாத் நகரிலும் 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்றது. ஓபல் சுச்சாட்டா உலக அழகி பட்டத்தை வென்றது ஒருபுறம் இருக்க, எத்தியோப்பியா அழகி ஹாசெட் டெரெஜே அட்மாசு முதல் ரன்னராகவும், போலாந்து அழகி மஜா கிளாஜ்தா 2வது ரன்னராகவும், மார்டினிக் அழகி ஆரேலி ஜோகிம் 3வது ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Miss World 2025: மிஸ் இந்தியா நந்தினி குப்தா ஏமாற்றம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஸ் இந்தியா நந்தினி குப்தாவால் கடைசி 8 போட்டியாளர்களான சுற்றுக்கு தகுதிபெற இயலவில்லை. அவர் கடைசி 18 போட்டியாளர்கள் அடங்கிய சுற்றோடு வெளியேறினார். மேலும் இந்த நிகழ்வில் மனிதநேய பணிகளை பாராட்டி வழங்கப்படும் மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ