Pahalgam Terror Attack ; ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குழுவின் பெயர் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்?, என்ன காரணம்? என்பது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

Pahalgam Terror Attack Latest Update : ஜம்மு காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலா தளத்தில் நடந்திருக்கும் தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலா தலமான பாகல்காம் ஏப்ரல் 22 ஆம் தேதியான நேற்று இரத்தம் சிந்திய கோரக் களமாக மாறியது. தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை நேரடியாக சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டு, 20க்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், உலகளாவிய கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் எவ்வாறு நடந்தது?
"மினி-ஸ்விட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் பைசரான் பள்ளத்தாக்கில் மதியம் 2:30 மணியளவில் திடீர் தாக்குதல் நடந்தது. லஷ்கர்-ஏ-தொய்பாவின் (LeT) கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல்களை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, இராணுவ உடையில் இருந்த தீவிரவாதிகள் அருகிலுள்ள காடுகளில் இருந்து வெளிவந்து சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தப்பித்தவர்கள் கூறும்போது, தீவிரவாதிகள் பாதிக்கப்பட்டவர்களின் மதத்தை கேட்டுள்ளனர், இஸ்லாமிய வாசகங்களை ஓதச் சொல்லியோ அல்லது சுன்னத் சோதனை செய்தோ இந்துக்கள் மற்றும் பிறரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கும் இந்த பகுதி குதிரைவண்டி அல்லது கால்நடையாக மட்டுமே செல்லக்கூடியது என்பதால், மருத்துவ உதவி தாமதமாகவே சென்று சேர்ந்தது. உள்ளூர் மக்கள் காயமடைந்தவர்களை குதிரைகளில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு செல்ல உதவியுள்ளனர். காயம் அதிகம் உள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகருக்கு அனுப்பினர்.
இந்த தாக்குதலில் இந்திய கடற்படையின் லெப்டினன்ட் விநாய் நர்வால் (26) என்பவர் உயிரிழந்தார். இவர் தனது திருமணத்திற்கு பின் விடுப்பில் இருந்தவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு உளவுத்துறை அதிகாரி தனது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிராவின் டோம்பிவ்லியைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் சஞ்சய் லெலே, அதுல் மோனே, ஹேமந்த் ஜோஷி ஆகியோர் உயிரிழந்தனர்.
உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தப்பியவர்களில் ஒரு பெண், தனது கணவர் சுட்டுக் கொல்லப்படும்போது "உதவி செய்யுங்கள்!" என்று கதறினார். நாக்பூரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி தப்பி ஓடும்போது கால் முறிந்து காயமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருக்கிறார். அங்கிருந்தவாறே தீவிரவாத தாக்குதல் குறித்து கேட்டறிந்த அவர், அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) கூட்டத்தை நடத்த உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை மதிப்பிட ஸ்ரீநகருக்கு சென்றார்.
பாதுகாப்பு படைகள் ட்ரோன்கள் மற்றும் கமாண்டோ படைகளுடன் பாகல்காம் அருகே தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில், அனந்த்நாக் போலீஸ் ஹெல்ப்லைன் வெளியிடப்பட்டுள்ளது: அனந்த்நாக் போலீஸ்: 9596777669, 01932225870 (வாட்ஸ்அப்: 9419051940).
உலக தலைவர்கள் கண்டனம்
இந்த தாக்குதல் உலகளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ஆதரவு தெரிவித்தார். இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு, ரஷ்யாவின் புடின், UAE, ஜெர்மனி மற்றும் UN இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தாக்குதல் நடத்தியவர்களை "மிருகங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மெகபூபா முப்தி (PDP) பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் ஏன் முக்கியமானது?
2019க்கு பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். வரவிருக்கும் அமர்நாத் யாத்திரைக்கு முன்னர் பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இத்தகைய தாக்குதல்கள் மூலம் சுற்றுலாத்துறையை பாதிக்கவும், காஷ்மீரில் அமைதியை குலைக்கவும் முயற்சிக்கின்றன. இந்தியா தரப்பில் கடுமையான எதிர்வினை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ