Boy Died Due To Dog Attack: 11 வயது சிறுவனின் கழுத்தை கடித்து, அரை அங்குலத்திற்கு பல் தடத்தை பதித்து வளர்ப்பு நாய் ஒன்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் அச்சிறுவனம் உயிரிழந்தான்.

Boy Died Due To Dog Bite: உத்தரப் பிரதேசத்தின் ஏத்வா மாவட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்று கடுமையாக கடித்ததில், 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. தெருவில் குப்பை அள்ளி வந்த சிறுவன் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சிறுவனின் உடலில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில் நாய் கடித்ததால் படுகாயமடைந்து அவர் உயிரிழந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து, அந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் நேற்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டார். சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கையின்படி, சிறுவனின் கழுத்தில் ஐந்து முறை கடித்தது தெரியவந்துள்ளது. அரை அங்குலம் அளவிற்கு நாயின் பல் தடம் அந்த சிறுவனின் கழுத்தில் பதிந்துள்ளது. ஏத்வா மாவட்டத்தில் உள்ள லால் புரா பகுதியில் உள்ள அந்த நாய் உரிமையாளரின் வீட்டின் அருகே அந்த சிறுவன் அலைந்திருக்கிறான். அப்போதுதான் அந்த நாய் அச்சிறுவனை தாக்கி உள்ளது.
வீட்டின் கூரையின் மேல் இருந்து குதித்த நாய், அந்த சிறுவனின் கழுத்தை குறிவைத்து தாக்கி உள்ளது. அந்த சிறுவன் நாயுடன் கடுமையாக போராடி உள்ளான், உதவிக்கேட்டு கத்திக் கூச்சலிட்டுள்ளான். ஆனால் அங்கு அவனுக்கு உதவ யாருமில்லை. இந்த நேரத்தில் அங்கு கூட்டமாக வந்த தெருநாய்களும் சேர்ந்து அந்த சிறுவனை கடித்து குதறியுள்ளன.
தொடர்ந்து, வழிபோக்கர்கள் பார்த்து தெருநாய்களை குச்சியை வைத்து துரத்தி உள்ளனர். 15 நிமிடங்களுக்கு அச்சிறுவன் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளான். அதன்பின்னரே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அச்சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும், அதிக ரத்தம் இழப்பால் மருத்துவ சிகிச்சைக்கு முன்பே அச்சிறுவன் உயிரிழந்தான்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளூர்வாசிகள் சிலர் கூறுகையில், கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அதே நாய் அங்கே வசிக்கும் இரண்டு தொழிலாளர்களையும் கடித்ததாகவும், அவர்களும் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் தெரிவித்தனர். அப்போது பலரும் அந்த நாயிடம் இருந்து அவர்களை தற்காத்துக்கொள்ள குச்சிகள், மரக்கட்டைகள், செங்கல், கல் போன்றவற்றை வைத்து தாக்கி நாயை காட்டுப்பகுதிக்கு விரட்டி தங்களை தற்காத்துக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கெனவே நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து கடும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் போது இதுபோன்ற செயல் பொதுமக்களுக்கு மேலும் அச்சமூட்டுவதாக அமைகிறது. வளர்ப்பு நாய்களை பாரமரிப்போர் முறையாக நாய் வளர்ப்பதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், தடுப்பூசி போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்துவதிலும் அவை மக்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையிலும் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குரல்களும் தற்சமயம் வலுக்கத் தொடங்கியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ