PM Modi Speech: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று மக்களவையில் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

PM Modi Address To Nation Latest News: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று மக்களவையில் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில், "இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி விவாதிக்க இங்கு வந்துள்ளேன். குறிப்பாக இந்த நாட்டின் பெண்களுக்காக... இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு தடைபட்டுள்ளது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சிறப்பாக முயற்சித்தும் நாங்கள் வெற்றிபெறவில்லை.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திருத்தத்தை செய்ய நிறைவேற்ற முடியவில்லை. இதற்கான தேசத்தின் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தேசத்தின் நலனே நமது முன்னுரிமை, ஆனால் அது சிலருக்கு அரசியல் ஆதாயம். தேசத்தின் நலனை விடவும் பெரியதாக மற்றவை இருப்பதால், அந்த சுமையை பெண்கள் சுமக்கின்றனர். இந்த முறையும் அதுவே நடந்துள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியலின் சுமையை நாட்டின் பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.
தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தனது பல ஆண்டு தவறுகளை சரிசெய்து, தனது பாவங்களுக்கு பரிகாரம் தேடும் என்று நான் நம்பியிருந்தார். ஆனால், பெண்களுக்கு ஆதாரவாக நிற்பதற்கும், ஒரு வரலாற்றை படைப்பதற்குமான வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது.
My address to the nation. https://t.co/2Vyx15A4rx
— Narendra Modi (@narendramodi) April 18, 2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் தனது செல்வாக்கையும், இருப்பையும் இழந்துவிட்டது. ஒரு ஒட்டுண்ணியைப் போல, காங்கிரஸ் சில பிராந்தியக் கட்சிகளின் மீது சவாரி செய்து தன்னை உயிரோடு வைத்துக்கொள்ள போராடி வருகிறது.
ஆனால் பிராந்தியக் கட்சிகள் வலுவடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, இந்த திருத்தத்தை எதிர்க்கும்படி செய்வதன் மூலம், பல பிராந்தியக் கட்சிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் அரசியல் சதியை அது தீட்டியுள்ளது.
பெண்களின் நலனுக்கான இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டபோது, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற பாரம்பரியக் கட்சிகள் மகிழ்ச்சியில் கைதட்டியதைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெண்களின் உரிமைகளை பறித்த பிறகு இந்த மக்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
இது பெண்களின் சுயமரியாதை, கௌரவத்தின் மீதான தாக்குதல். பெண்கள் அனைத்தையும் மறைந்துவிடுவார்கள், ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எனவே, மக்களவையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நடத்தையால் ஏற்பட்ட வலி ஒவ்வொரு பெண்ணின் இதயத்திலும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
நாடு முழுவதும் உள்ள பெண்கள் மக்களவையில் இந்த தலைவர்களை பார்க்கும்போதெல்லாம்... தொகுதிகளில் உள்ளவர்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீடு தடுக்கப்பட்டபோது இதே நபர்கள்தான் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பதை நினைவில் கொள்வார்கள்.
நேற்று மக்களவையில் பெண்களுக்கான அதிகாரம் சார்ந்த வந்த திருத்த மசோதாவை எதிர்த்த கட்சதிகளிடம் தெளிவாக ஒன்றை கூறுகிறேன். இந்த நபர்கள் பெண்களின் சக்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுவார்கள்.
பெண்கள் இவர்களின் நோக்கங்களை புரிந்துகொண்டு உண்மையை முழுமையாக தெரிந்துவைத்துள்ளார்கள். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் அவர்கள் செய்த பாவத்திற்கு எதிர்க்கட்சிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான 66 சதவீத வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், நாட்டின் 100 சதவீதப் பெண்களும் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நம் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு உரிய உரிமையை வழங்குவதற்கான ஒரு நேர்மையான உண்மையான மற்றும் புனிதமான முயற்சியாக இந்த மசோதா இருந்தது. இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பெண்களைச் சமமானவர்களாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இது இருந்தது. இது காலத்தின் தேவையாகும்.
தேசத்தின் ஒவ்வொரு பிரதேசத்தையும் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு - வலுப்படுத்துவதற்கும், அதன் அளவு அல்லது மக்கள்தொகையை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாநிலத்தின் குரலையும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை ஒதுக்குவதற்கும் இது சிறந்த முயற்சியாக இரு்தது. அனைவருக்கும் சம அளவில் அதிகாரம் அளிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருந்தது" என்றார்.
மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா என மூன்று மசோதாக்களை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் வெற்றிபெற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வாக்குகள் வேண்டும். மக்களவையில் மொத்தம் 540 இடங்கள் உள்ளன, மசோதா வெற்றிபெற 360 வாக்குகள் தேவைப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 293 மக்களவை உறுப்பினர்களும், இந்தியா கூட்டணியில் 233 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய வாக்கெடுப்பில் 528 பேர் மட்டுமே பங்கேற்றனர். 12 பேர் பங்கேற்கவில்லை. இதில் ஆதரவாக 352 வாக்குகள் தேவைப்பட்டன. இந்நிலையில், ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். உரிய வாக்குகள் கிடைக்காததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவில்லை.
தொடர்ந்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடன் மற்ற 2 மசோதாக்களும் இணைக்கப்பட்டுள்ளன என்பதால் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. மக்களவையில் நிறைவேறாததால் மாநிலங்களவைக்கும் இந்த மசோதா போகாது. தேசிய ஜனநாய கூட்டணிக்கு மாநிலங்களவையில் 141 உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு 83 உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!