)
சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார். தனது சுதந்திர தின விழா உரையில் பேசிய மோடி, இந்த மாற்றங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு தீபாவளி போனஸாக அமையும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்ற ஆவல் மக்களிடையே அதிகரித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மட்டும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் புகையிலை, பான் மசாலா மற்றும் இதர ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய உயர் வரி அடுக்கை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி சீர்திருத்தத்தின் மூலம், பல்வேறு அத்தியாவசிய மற்றும் அன்றாட பொருட்களின் விலைகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கு நேரடியாக பயன் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
5% வரி வரம்புக்குள் சில முக்கிய பொருட்கள் வர உள்ளன. தற்போது 12% வரி அடுக்கில் உள்ள காய்கறிகள், சாக்லேட், மாவு வகைகள், நொறுக்கு தீனிகள், நட்ஸ், கொக்கோ பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பொருட்கள் 5% வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும் ஆடைகள், செருப்புகள், கண் கண்ணாடிகள் மற்றும் சைக்கிள்கள் போன்ற பொருட்களும் 5% வரி அடுக்கிற்கு மாற்றப்பட உள்ளன. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவோ அல்லது முழுமையான வரி விலக்கோ அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. காப்பீட்டு பிரீமியம், ஸ்டேஷனரி பொருட்கள், ஜவுளி மற்றும் உரம் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் ஆன டிவி, ஃபிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. கட்டுமானப் பொருட்கள் சிமெண்ட் மீதான வரியும் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 350சிசி வரையிலான இருசக்கர வாகனங்களுக்கான வரி 28%ல் இருந்து 18% ஆக குறைய வாய்ப்புள்ளது. 1200சிசி வரையிலான சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி 31 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைப்ரிட் வகை கார்களுக்கான வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
புதிய 40% வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்படுவதால், புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களின் விலை கணிசமாக உயரும். மேலும், சில குறிப்பிட்ட ஆடம்பர பொருட்களும் இந்த உயர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம். மேலும் வைரம், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. அவை தற்போதைய வரி விதிப்பு முறையின் கீழ் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த வரி சீர்திருத்தங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அடங்கிய உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கான வரைவு ஜிஎஸ்டி கொள்கை உருவாக்கப்பட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒப்புதல் பெற்ற பிறகு, இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ