)
Prashant Kishor Prediction, Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேசிய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு பின்னர், முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும் இது பார்க்கப்படுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் மகா பந்தன் கூட்டணியும் ஆட்சியை கைப்பற்ற கடுமையாக முட்டிமோதும்.
நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளிலும், நவம்பர் 11ஆம் தேதி 122 தொகுதிகளிலும் மொத்தம் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தொடங்கிய நிலையில், தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என தினந்தினம் பரபரப்புக்கு மட்டும் பஞ்சமில்லை.
இந்நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தல் குறித்த தனது கணிப்பை PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரின் ஜன் சுராஜ் கட்சி பீகார் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில், பிரசாந்த் கிஷோர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார். தேர்தலில் போட்டியிட்டால், தான் நிற்கும் தொகுதியில் மட்டும் அதிகம் பரப்புரை செய்ய வேண்டியது வரும் என்றும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார்.
அந்த வகையில், பீகார் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்?, எந்த கட்சி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்ற தனது கணிப்பை பிரசாந்த் கிஷோர் இன்று அறிவித்துள்ளார். மொத்தம் 243 தொகுதிகளில் 122 இடங்களை கைப்பற்றும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். அப்படியிருக்க, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் தேர்தலில் தோல்வியை தழுவும் என பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்வது ஆகியவற்றிலேயே ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும் அந்த கூட்டணி மக்களின் மதிப்பை பெறாது என்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்த முறை எதுவுமே சரியாக அமையவில்லை என கூறிய பிரசாந்த் கிஷோர், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு தகுந்த இடங்களை ஒதுக்கவில்லை என்றார்.
பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக முதன்முதலில் நிதிஷ்குமாரிடம் தான் பணியாற்றினார். பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார் குறித்தும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 25 இடங்களை பிடிக்கவே மிகவும் திணறும் என்றார். நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், அவர் மகா பந்தன் கூட்டணிக்கும் சாதகமாக கருத்து தெரிவிக்கவில்லை. "இந்தியா கூட்டணிக்கும் நிலைமை அவ்வளவு சாதமாக இல்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான பிரச்னைக்கு ஒரு முடிவே இல்லை" என்கிறார். ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பீகாரில் மரியாதையே இல்லை என்றார்.
"காங்கிரஸ் கட்சியினர் ராஷ்டிரிய ஜனதா தளத்தையும், மற்ற கட்சிகளையும் நம்பியே இருக்கிறார்கள்... ராகுல் காந்தியை யாரும் பெரிதாக சீண்டுகிறார்களா என்ன? மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸின் பெரிய தலைவர் என்பதால் ஓரளவு கவனம் பெறுகிறார். ஆனால் அவரை யாரும் கவனிக்கிறார்களா? பீகாரில் அவரால் ஏதும் தாக்கம் இருக்கிறதா? அவர்களுக்கு பீகார் மக்களின் வாக்கு வேண்டும், அவ்வளவுதான்" என பிரசாந்த் கிஷோர் வழக்கமாக காங்கிரஸ் குறித்தும், ராகுல் காந்தி குறித்தும் இதையே கூறுவார்.
மேலும் தனது கட்சி குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "ஜன் சுராஜ் கட்சி ஒன்று 10 தொகுதிகளுக்கும் கீழ் வெற்றி பெறும் அல்லது 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இதற்கிடையே எதுவும் கிடையாது" என அதிரடியாக பேசினார். "நாங்கள் ஒன்று அமோகமாக வெற்றி பெறுவோம் அல்லது படுதோல்வி அடைவோம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்கிறார். "150 தொகுதிகளுக்கு குறைவாக, அதாவது 120 அல்லது 130 இடங்களில் வென்றால் கூட தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஏற்பட்ட தோல்வி என்றே நான் கருதுகிறேன்" என்றும் அவர். பிரசாந்த் கிஷோரின் இந்த கணிப்புகள் எந்தளவிற்கு சரியாக இருக்கிறது என்பதை அறிய நாம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ