)
Rahul Gandhi Arrested In Delhi: நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி இன்று (ஆகஸ்ட் 11) எதிர்க்கட்சிகள் பேரணி மேற்கொண்டனர். 'வாக்கு திருட்டு' (Vote Chori) என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் பேரணியில் பங்கேற்றனர்.
#WATCH | Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "The reality is that they cannot talk. The truth is in front of the country. This fight is not political. This fight is to save the Constitution. This fight is for One Man, One Vote. We want a clean, pure voters… pic.twitter.com/Aj9TvCQs1L
— ANI (@ANI) August 11, 2025
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணியாகச் சென்ற 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி.க்களை காவல்துறை தடுத்தி நிறுத்தியது. 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், பேரணியில் 300 பேர் பங்கெடுத்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுத்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், சகரிகா கோஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பின்னர் ராகுல் காந்தி ஊடகத்திடம் பேசுகையில், "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் (ஆளும் பாஜக) பேச முடியாது. உண்மை நாட்டு மக்கள் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்கு என்பதற்கானது. எங்களுக்குத் தேவை சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல்" என்றார்.
பேரணியில் பங்கேற்ற பலரும் கைதாகி இருக்கும் நிலையில் மொத்தம் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதை நேரத்தில், கைதாகி உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக டெல்லி காவல் இணை ஆணையர் தீபக் புரோஹித் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள், பல்வேறு கட்சியின் தொண்டர்கள் கையில் பதாகைகளை ஏந்தி படி, உரக்க கோஷமிட்டு பேரணி நடத்தி வந்ததை பார்க்க முடிந்தது. தொடர்ந்து போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு பேரணி நடந்தது. கைது நடவடிக்கையின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மகுவா மொய்த்ரா, மிதாலி பாஹ் ஆகியோர் மயக்கமடைந்து கீழே விழுந்ததும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது உடனே ஓடி வந்த ராகுல் காந்தி அவர்களுக்கு உதவினார். எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் காரணமாக மதியம் 2 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜகவும், தேர்தல் ஆணையமும் கைக்கோர்த்துக் கொண்டு பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. கடந்தாண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இருந்தே இந்த குற்றச்சாட்டு வலுவாக எழுந்து வந்தது. மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றிக்காக வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்திருப்பதாக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை குற்றஞ்சாட்டின.
மக்களவை தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பாஜக பெரும்பாலும் தோல்வியடைந்த நிலையில், அதற்கு பின் 6 மாதங்களில் பல்லாயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தன. மகாராஷ்டிராவில் மட்டுமின்றி தற்போது கர்நாடகாவிலும் மக்களவை தேர்தலின்போது இதுபோன்று வாக்காளர் பட்டியலில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி பல்வேறு ஆதாரங்களையும் வெளியிட்டார்.
மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் உள்ள மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான போலி வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இருப்பினும் இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இன்னும் முறையான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ