)
Bangalore Stampede Arrest: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 வருடங்கள் போராடி அதன் முதல் ஐபிஎல் கோப்பையை கடந்த ஜூன் 3ஆம் தேதி வென்றது. ஆர்சிபியின் இந்த வெற்றி உலகம் முழுவதும் விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்தது.
ஆனால் அந்த கொண்டாட்ட மனநிலை ஒரு நாள் கூட முழுதாக நீடிக்கவில்லை. பெங்களூருவில் வெற்றி விழாவுக்கு வீரர்கள் வருகை தந்தபோது அதிகமானோர் ஒரே இடத்தில் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 11 உயிர்கள் பலியானது கடும் சோகத்தை உண்டாக்கியது.
Bangalore Stamepe Arrest: காவல்துறையினர் இடைநீக்கமும், வழக்குப்பதிவும்
தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பிலும், ஆர்சிபி அணி தரப்பிலும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் தரப்பிலும் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள், பிரபலங்களிடம் இருந்தும் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா, சின்னசாமி மைதான பொறுப்பாளர், ஏசிபி, மத்திய டிசிபி, நிலைய இல்ல அதிகாரி, காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் கப்பன் பார்க் காவல் நிலைய பொறுப்பாளர் ஆகியோர் உடனடியாக மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தொடர்ந்து, ஆர்சிபி அணி மீதும், அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனமான DNA Entertainment மீதும், சின்னசாமி மைதானத்தை பராமரிக்கும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சின்னசாமி மைதானம் அமைந்துள்ள கபன் பார்க் வட்டத்தின் காவல்துறை ஆய்வாளர் கிரீஷ் அளித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Bangalore Stamepe Arrest: கைதான நிகில் சோசலே...? யார் இவர்...?
இந்நிலையில், ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் ஹெட் நிகில் சோசலே மற்றும் DNA Entertainment மூன்று ஊழியர்கள் போலீசார் மூலம் கைது செய்யபட்டுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வீரர்களின் வெற்றி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி தராத போதிலும் இவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெற்றி ஊர்வலம் குறித்து தவறான தகவல்களை அளித்ததன் பேரால் அதிகமாக கூட்டம் கூடியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
நிகில் சோசலே ஆர்சிபியின் மார்கெட்டிங் மற்றும் வருவாய் தலைவராக உள்ளார். அவர் சுமார் 2 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார். மேலும் ஆர்சிபி அணியின் உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்டை (USL) வைத்திருக்கும் Diageo India நிறுவனத்தின் ஊழியராக உள்ளார். இவர் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்தபோது விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Bangalore Stamepe Arrest: மேலும் மூவர் கைது
ஆர்சிபியின் வெற்றி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்த DNA Entertainment நிறுவனத்தின் மூன்று ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்நிறுவனத்தின் கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Bangalore Stamepe Arrest: ஆர்சிபி மீதான குற்றச்சாட்டு என்ன?
காவல் ஆய்வாளர் கிரீஷ் கொடுத்த புகாரில், "ஜூன் 4 ஆம் தேதி காலை 5.30 மணி வரை ஆர்சிபி வெற்றியைத் தொடர்ந்து மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் அதிகமானோர் பணியில் இருந்தனர். ஜூன் 4ஆம் தேதி பிற்பகல் மற்றொரு பெரிய கூட்டத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும் என்பதால் மைதானத்தில் நிகழ்வுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதுபோன்ற போதிலும், கர்நாடக கிரிக்கெட் சங்கம், ஆர்சிபி மற்றும் DNA ஆகியவை தங்கள் திட்டமிடப்படி நிகழ்ச்சியை தொடர்ந்து செயல்படுத்தி காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்தனர்.
போலீசாரின் அனுமதியின்றி, ஜூன் 4ஆம் தேதி, ஆர்சிபி தங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளத்தில் தங்கள் கொண்டாட்டம் மற்றும் வெற்றி அணிவகுப்பை அறிவித்தது. இதனால், ரசிகர்கள் மைதானத்தைச் சுற்றி ஒன்று கூடினர். இந்தச் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியதும், காவல்துறையினர் மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு மற்றும் தேவையான ஏற்பாடுகளைக் கோரினோம். ஜூன் 4ஆம் தேதி காலை 9:00 மணிக்கு, உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, நகரம் முழுவதிலும் இருந்து வரும் காவல்துறையினரை அவசரமாக கேட்டுக்கொண்டனர், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெற்றி விழாவிற்கு ஆர்சிபி வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
Bangalore Stamepe Arrest: தவறான திட்டமிடல்
ஜூன் 4 ஆம் தேதி, பாராட்டு விழாவிற்கு ஆர்சிபி அணி விதான் சவுதாவிற்கு வந்தது, இது பெரிய கூட்டத்தையும் மீறி சுமூகமாக நடந்தது. மாலை 5:30 மணி அளவில், சின்னசாமி மைதானத்தை நோக்கி வெற்றி அணிவகுப்பு தொடங்கியது. மைதானத்தில் போலீசார் பாதுகாப்பை வழங்கினர். ஆனால் கர்நாடக கிரிக்கெட் சங்கம், ஆர்சிபி மற்றும் DNA கூட்டத்தை எவ்வாறு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதை திட்டமிடத் தவறிவிட்டன.
மைதானத்தில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் வெளியே கூடியிருந்தனர். பிற்பகல் 3:10 மணிக்கு, மைதானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன, இதனால் குழப்பம் ஏற்பட்டது. நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்ப காவல்துறை அதிகாரிகளும் VIP பாதுகாப்பு அதிகாரிகளும் போராடினர். துரதிர்ஷ்டவசமாக, 11 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர், மீதமுள்ள கூட்டத்தை போலீசார் வெளியே கலைக்க வேண்டியிருந்தது" என குறிப்பிட்டிருந்தது.
"வெற்றி விழா நிகழ்வு மாலை 5:45 மணியளவில் தொடங்கியது,. மேலும் சிக்கல்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. கர்நாடக கிரிக்கெட் சங்கம், ஆர்சிபி மற்றும் DNA ஆகியவை காவல்துறை அனுமதியின்றி நிகழ்வை நடத்தின. கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது என்பதைத் திட்டமிடத் தவறிவிட்டன.
Bangalore Stamepe Arrest: ரசிகர்களை குழப்பிய ஆர்சிபி
மைதான வாயில்களில் இலவச நுழைவுச் சீட்டுகள் குறித்து ஆர்சிபியின் சமூக ஊடகக் கணக்குகள் பதிவிட்டதால் நிலைமை மோசமடைந்தது. பாஸ்கள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பது குறித்து ஆர்சிபி காவல்துறையினருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்கவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேட் 9 & 10-இல் இலவச பாஸ்கள் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் விநியோகிக்கப்படவில்லை. வெற்றி பேரணிக்கு அனுமதி கொடுக்காவிட்டாலும் மதியம் 3.14 மணிக்கு வெற்றி பேரணி இருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதே ரசிகர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 22 வாயிற்கதவுகள் இருக்கும் நிலையில், 19 - 20 - 21 ஆகிய மூன்று வாசற்கதவுகள் மட்டுமே ரசிகர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது, இதுவும் DNA Entertainment அறிவுறுத்தலின் பேரில் நடந்துள்ளது.
சின்னசாமி மைதானத்தின் வெளியே காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்களிடையே இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் 11 பேர் இறந்தனர், காவல்துறை உள்பட 64 பேர் காயமடைந்தனர், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ