)
பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில இளைஞர்களை கவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் முக்கிய அம்சமாக, Mukhyamantri Nishchay Swayam Sahayata Bhatta Yojana திட்டத்தின் கீழ் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டமும் அடங்கும். இந்த திட்டம் சுமார் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் 7 உறுதிமொழி திட்டத்தின் ஒரு பகுதியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு இந்த உதவித்தொகை +2 முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது கலை, அறிவியல் மற்றும் வர்த்தக பிரிவுகளில் பட்டம் பெற்ற வேலையில்லாத இளைஞர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, வேறு எந்த படிப்பையும் தொடராத, அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இல்லாத அல்லது சுயதொழில் செய்யாத பட்டதாரி இளைஞர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியானவர்கள்.
தகுதியுள்ள இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை, மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். இந்த நிதியுதவி, இளைஞர்கள் தங்களுக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளவும் உதவும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த உதவித்தொகை திட்டத்துடன், பிரதமர் மோடி மேலும் பல முக்கிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். உலக தரத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்கும் நோக்கில், தொழில்துறை சார்ந்த படிப்புகளை வழங்கும் ஜன நாயக் கர்ப்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இது, தேர்தல் நடைபெறும் பீகாரில் பின்தங்கிய சமூகத்தினரை ஈர்க்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பீகார் மாணவர் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.4 லட்சம் வரையிலான கல்வி கடன்களுக்கு முழுமையாக வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் ஆற்றலை முறையாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், பீகார் யுவ ஆயோக் சட்டப்பூர்வ ஆணையம் தொடங்கப்படுகிறது. பாட்னா பல்கலைக்கழகம் உட்பட நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பீகார் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 பேருக்கு பணி நியமன ஆணைகளும், 25 லட்சம் மாணவர்களுக்கு ரூ.450 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். சமீபத்தில், 75 லட்சம் பெண்கள் சுயதொழில் தொடங்க தலா ரூ.10,000 வீதம், முதல் தவணையாக ரூ.7,500 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் நலத்திட்டங்கள், பீகாரின் இளைஞர்கள் மற்றும் பெண்களை மையமாக வைத்து, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முக்கிய வியூகமாக ஆளும் தரப்பால் முன்னெடுக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ