)
RSS Leader Mohan Bhagwat: 75 வயதான பின்னர் தலைவர்கள் ஓய்வுபெற்று இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று (ஜூலை 11) பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
குறிப்பாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து பிரதமர் நரேந்திர மோடிக்கே சொல்கிறார் என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மோகன் பகவத் வரும் செப் 11ஆம் தேதியும், பிரதமர் மோடி செப் 17ஆம் தேதியும் தங்களின் 75வது பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
RSS Leader Mohan Bhagwat: ஜெய்ராம் ரமேஷ் கருத்து
மோகன் பகவத்தின் கருத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் அவரது X பதிவில், "மோசமான Award-jeevi பிரதமர்! நாடு திரும்பிய உடனே, வரும் செப்டம்பர் 17 அன்று 75 வயதாகப் போகிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் நினைவூட்டுகிறாரே..." என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தற்போதுதான் தொடர்ச்சியாக ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் செப் 11ஆம் தேதி மோகன் பகவத் 75 வயதை அடைவதையும் பிரமதர் மோடி அவருக்கு நினைவுப்படுத்தலாம் என்றும் ஜெய்ராம் ரமேஷ் அந்த X பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற ரீதியில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
PM Narendra Modi: பாலிவுட் தப்பித்துவிட்டது
ஜெய்ராம் ரமேஷ் மட்டுமின்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெராவும் மோகன் பகவத்தின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "இப்போது இரண்டு பேரும் தங்களின் மூட்டுகளை கட்டிக்கொண்டு, ஒருவரையொருவர் வழிகாட்டிக்கொள்ளுங்கள்" என மோடியையும், மோகன் பகவத்தையும் குறிப்பிட்டு பவன் கெரா பதிவிட்டுள்ளார். மோடியும், பகவத்தும் அரசியலமைப்பையும், நாட்டையும் அழிப்பதாகவும் பவன் கெரா அவரது X பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், பிரதமர் ஒருவேளை அரசியலுக்கு வரவில்லை என்றால் நிச்சயம் பாலிவுட்டுக்கு சென்றிருப்பார் என்றும் ஆனால் பாலிவுட் தப்பித்துவிட்டது, நாடால் தப்பிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
RSS Leader Mohan Bhagwat: மோகன் பகவத் பேசியது என்ன?
நாக்பூரில் இன்று நடந்த மறைந்த ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மொரோபந்த் பிங்லிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தக் கருத்தை தெரிவித்தார். '75 வயதில் சால்வை ஒருவரின் மீது போர்த்தப்படுவதற்கு காரணமே, அவர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்டார் என்றும், அவர் ஒதுங்கிக்கொண்டு மற்றவர்கள் பணியாற்ற விட வேண்டும்' என மொரோபந்த் பிங்லியின் கருத்தை மேற்கொள் காட்டி மோகன் பகவத் பேசியிருந்தார்.
PM Narendra Modi: சஞ்சய் ராவத் கிளப்பிய பேச்சு...!
பிரதமர் மோடியின் ஓய்வு குறித்த பேச்சுகள் கிளம்புவது இது முதல்முறை அல்ல. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி, மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றிருந்தார். பிரதமராக பதவியேற்று 11ஆம் ஆண்டுகளுக்கு பின் அவர் முதல்முறையாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு வருகை தந்தார் என்றும் பிரதமர் ஓய்வுக்கும் அவரின் வருகைக்கும் தொடர்பு உள்ளதாக உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
"எனக்கு தெரிந்தவரை பிரதமராக பொறுப்பேற்ற பின் 10 - 11 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு மோடி ஒருபோதும் சென்றதில்லை. தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புகிறது, பிரதமர் மோடி தற்போது வெளியேற இருக்கிறார்" என சஞ்சய் ராவத் ஆருடம் தெரிவித்தார். இருப்பினும் இது வழக்கமான பயணம்தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ