)
RSS Mohan Bhagwat Speech In Manipur: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மணிப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அவர் பேசியது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்துக்கள் இல்லாவிட்டால், உலகமே இல்லாமல் போய்விடும் என பேசிய மோகன் பகவத், உலகை நிலைநிறுத்துவதில் இந்து சமூகம் மையமாக இருந்தது என்றும் பேசியிருக்கிறார். இந்து சமூகம் அழிக்க முடியாதது என்று கூறிய மோகன் பகவத் யுனான் (கிரேக்கம்), மிஸ்ர் (எகிப்து) மற்றும் ரோம் போன்ற பேரரசுகளை இந்தியா வென்றிருந்தது என்பதை சுட்டிக்காட்டி அதை பேசினார்.
இதுகுறித்து மோகன் பகவத் பேசுகையில், "உலகின் ஒவ்வொரு தேசமும் எல்லா வகையான சூழ்நிலைகளையும் கண்டிருக்கிறது. கிரேக்கம், எகிப்து, ரோமாப்புரி என அனைத்து நாகரிகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. நமது நாகரிகத்தில் ஏதோ ஒன்று இருப்பதால்தான், நாம் இன்னும் இங்கே நிலைபெற்று இருக்கிறோம்.
பாரதம் என்பது ஒரு அழிவில்லாத நாகரிகத்தின் பெயர்... நமது சமூகத்தில் நெட்வோர்கை உருவாக்கி உள்ளோம், அதனால்தான் இந்து சமூகம் எப்போதும் நிலைபெற்றிருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்" என்றார். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோர் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர் என்பதால், யாரும் இந்து அல்லாதவர்கள் அல்ல என்றும் மோகன் பகவத் குறிப்பிட்டு பேசினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது. நாட்டை வலுப்படுத்த, அதன் பொருளாதாரம் முற்றிலும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய மோகன் பகவத், அதேநேரத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ராணுவத் திறனும், அறிவுத் திறனும் சமமான முக்கியத்துவத்தை பெறுகிறது என்றும் பேசினார். அமெரிக்கா இந்தியாவின் மீது அதிக வரி சுமத்தியதை தொடர்ந்து, பொருளாதார தன்னிறைவு குறித்து எழுந்த பேச்சுக்களை ஒட்டி மோகன் பகவத் இந்த கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். நக்ஸல் இயக்கம், ஆங்கிலேய ஆட்சி ஆகியவற்றின் தோல்வியை குறிப்பிட்டு பேசிய மோகன் பகவத், மக்கள் இனி இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
"பிரிட்டிஷ் பேரரசின் மீது சூரியன் ஒருபோதும் மறையாது. ஆனால் இந்தியாவில், அவர்களின் சூரியன் ஏற்கனவே மறையத் தொடங்கிவிட்டது. 90 ஆண்டுகளாக நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். அந்தக் குரலை அடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. சில நேரங்களில் அது பலவீனமானது, சில நேரங்களில் அது வலுவடைந்தது, ஆனால் அது ஒருபோதும் மறைந்துபோக அனுமதிக்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டில் வன்முறை வெடித்தது. மெய்தி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறையில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 ஆயிரம் பேர் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கழித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலவரத்திற்கு பின் முதல்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ