Jagdeep Dhankhar Resignation: ஜக்தீப் தன்கருக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து நேற்று ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னரே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Secret Phone Call Behind Jagdeep Dhankhar Resignation: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்றிரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பதவி விலகியதாக அவர் அறிவித்திருந்தாலும் கூட நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இதை அறிவிப்பதுதான் சந்தேகத்தை எழுப்பியிருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
Jagdeep Dhankhar: எதிர்க்கட்சிகளின் தீர்மானத்திற்கு ஒப்புதல்
இந்நிலையில், ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து அவருக்கு வந்த ஒரு போன் கால்தான் முக்கிய காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, அலகாபாத் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீதிபதி பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ராஜ்ய சபாவின் செயலாளரைக் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நடந்த பல சம்பவங்களே அவரின் ராஜினாமாவுக்கு விதிட்டதாக கூறப்படுகிறது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது
Jagdeep Dhankhar: மத்திய அரசுக்கு அதிருப்தியா?
எதிர்க்கட்சிகளின் இந்த தீர்மானத்தை துணை ஜனாதிபதி ஏற்றது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நீதிபதிக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பை இது பறித்துவிட்டதாலும், எதிர்க்கட்சிகள் முந்திக்கொண்டதாலும் மத்திய அரசு அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது.
Jagdeep Dhankhar: ரகசிய போன் காலில் வாக்குவாதம்
அதைத் தொடர்ந்து, ஜக்தீப் தன்கருக்கு மத்திய அரசின் தரப்பில் இருந்து நேற்று தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது என்றும் அதில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏற்பட்ட அதிருப்தியை ஜக்தீப்பிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த தொலைப்பேசி உரையாடலிலேயே ஜக்தீப் தன்கர் காட்டமாக கருத்து தெரிவித்ததாகவும், இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காரசாரமான அந்த வாக்குவாதத்தில் தனது குடியரசுத் துணைத் தலைவர் அதிகாரம் குறித்தும் ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jagdeep Dhankhar: ஜக்தீப் தன்கருக்கு அதிகரித்த அழுத்தம்
அந்த தொலைப்பேசி உரையாடலை தொடர்ந்து மத்திய அரசுக்கு அதிருப்தி அதிகமாகி ஜக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் அளவிற்கு பேச்சுக்கள் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவே ஜக்தீப் தன்கர் தனது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஜக்தீப் தன்கர் எழுதிய ராஜினாமா கடிதம் சரியாக இரவு 9.25 மணிக்கு பதிவிடப்பட்டது. இருப்பினும் ஜக்தீப் தன்கருக்கு வந்த அந்த தொலைப்பேசி அழைப்பு குறித்த தகவல்கள் உறுதியாகவில்லை.
Jagdeep Dhankhar: கூட்டத்திற்கு வராத ஜே.பி. நட்டா, கிரண் ரிஜூஜூ
ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவை தொடர்ந்து மேலும் பல சந்தேகங்களும், கேள்விகளும் எழத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் நேற்று நாடாளுமன்ற அலுவல் ஆலோசனை குழுவின் கூட்டத்தை ஜக்தீப் தன்கர் முதலில் 12.30 மணிக்கு கூட்டியிருக்கிறார். மாநிலங்களவை அவை முன்னவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோர் உள்பட பல உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் விவாதத்திற்கு பிறகு மீண்டும் மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. சரியாக 4.30 மணிக்கு கூட்டம் மீண்டும் கூடியது. ஆனால், ஜே.பி. நட்டாவும், கிரண் ரிஜூஜூவும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது ஜக்தீப் தன்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இந்த கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு ஒத்திவைத்ததாகவும் கூறப்படுகிறது.
Jagdeep Dhankhar: ஜே.பி. நட்டாவின் பேச்சு
அதுமட்டுமின்றி, நேற்று பகல்காம் தாக்குதல் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் உரையாற்றியபோது, 'நான் பேசுவது மட்டுமே நாடாளுமன்ற பதிவில் குறிப்பிடப்படும்' என ஜே.பி. நட்டா பேசியது, அவைத் தலைவரை அவமதிக்கும் செயலாக உள்ளது காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
Jagdeep Dhankhar: ஜே.பி. நட்டா மறுப்பு
ஆனால் இந்த அனைத்தையும் ஜே.பி. நட்டா மறுத்திருக்கிறார். கிரண் ரஜூஜூவும் நானும் வேறு முக்கிய நாடாளுமன்ற பணிகள் இருந்ததால், மாலை 4.30 மணிக்கு நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இதுகுறித்து குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகத்திற்கு முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றார். மேலும், மாநிலங்களவையில் தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்தார். "நான் பேசியது எதிர்க்கட்சித் தலைவரை நோக்கிதான். அவைத் தலைவரை நோக்கி அப்படி கூறவில்லை" என விளக்கினார்.
Jagdeep Dhankhar: 'அவருக்கும் அரசுக்குமே தெரியும்'
ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஊடகங்களிடம் கூறுகையில், "இதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். இதில் கருத்து சொல்ல எதுவுமில்லை. ஒன்று அரசுக்கு தெரியும் அல்லது அவருக்கு தெரியும். அவரது ராஜினாமாவை ஏற்க வேண்டுமா இல்லையா என்பதில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
ஜக்தீப் தன்கர் கடந்த 10 நாள்களுக்கு முன்னர்தான் தனது ஓய்வு குறித்து பேசியிருந்தார். அதில், 74 தெய்வீக தலையீட்டிற்கு உட்பட்டு தான் சரியான நேரத்தில், அதாவது 2027ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஓய்வு பெறுவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ