கோரமண்டல் ரயில் விபத்து: 350 பேர் படுகாயம்... உயரும் பலி எண்ணிக்கை - நிவாரணம் அறிவிப்பு!

Odisha Trains Accident: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதை தொடர்ந்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 3, 2023, 12:52 AM IST
  • யஸ்வந்த்பூர் - ஹவுரா ரயிலும் விபத்துக்குள்ளானது.
  • ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் செல்கிறார்.
  • பிரதமர் மோடி விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து ட்வீட்
கோரமண்டல் ரயில் விபத்து: 350 பேர் படுகாயம்... உயரும் பலி எண்ணிக்கை - நிவாரணம் அறிவிப்பு! title=

Coromandel Express Accident: கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் - 12842) இன்று மாலை 3. 20 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக ரயில்வேதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதால்தான் முதலில் விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறிது நேரம் கழித்து, பெங்களூருவின் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி செல்லும் மற்றொரு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 16 பேட்டியில் 800 பேருக்கு அதிகமாகனோர் முன்பதிவு செய்துள்ளனர் என தகவல்  தெரிவிக்கப்ட்டுள்ளது. இதில் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கொல்கத்தாவில் இன்று மாலை 3.20 மணிக்கு கிளம்பிய இந்த ரயில், சென்னைக்கு நாளை மாலை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த விபத்தில் 132 பேர் காயமடைந்திருப்பதாக ஒடிசாவின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் விபத்து குறித்து ட்வீட் செய்துள்ளனர்.  

தற்போது, விபத்து நடந்த இடத்தில் மீட்புக்குழுவினர், பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்தால் பலரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அவசர உதவி எண்கள்

ஹவுரா ஹெல்ப்லைன் - 033 26382217 காரக்பூர் ஹெல்ப்லைன் - 8972073925, 9332392339, பாலசோர் ஹெல்ப்லைன் - 8249591559, 7978418322 ஷாலிமார் ஹெல்ப்லைன் - 9903370746 3503370740, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - 430 45430 953, 044 25354771 உள்ளிட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்கள்  ரயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளன. 

முதல்வர் ஆலோசனை

விபத்து தொடர்பாக ஓடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை மேற்கொண்டார். இந்த விபத்தின் மீட்பு பணியில் அனைத்து உதவிகளையும் தங்கள் தரப்பில் இருந்து வழங்க தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தெரிவித்துள்ளார். 

2009ஆம் ஆண்டிலும் விபத்து

ஒடிசா தீயணைப்புத் துறைத் தலைவர் சுதன்ஷு சாரங்கி, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலசோர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மூன்று பிரிவுகளும், அதன் மாநில துணைப்படையின் நான்கு பிரிவுகளும், 60 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.

நிவாரணம்

ஒடிசாவில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் நிவாரண நிதியில் இருந்தும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | திருப்பதியில் விபத்தைத் தடுக்க வித்தியாசமான முயற்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News