)
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டமும், பட்டாசுகளின் சத்தமும், கூடவே வீட்டில் செய்யக்கூடிய பலகாரங்களும் தான். ஆனால், இந்த தீபாவளிக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்பு கடை, இனிப்பு என்ற உணவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. சாதாரண இனிப்பு உணவுகளை சாமானியர்கள் வாங்க முடியாத படி செய்துள்ளனர் இந்த கடைக்காரர்கள். ஒரு கிலோ இனிப்பு 1.11 லட்சம் ரூபாய் விலையில், 24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் ஒரு பிரத்யேக இனிப்பை அறிமுகப்படுத்தி அனைவரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.

ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் அமைந்துள்ள 'த்யோஹார்' என்ற இனிப்பு கடை தான் இந்த வித்தியாசமான இனிப்பை செய்துள்ளனர். "ஸ்வர்ண பிரசாதம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த இனிப்பு தான் தற்போது இந்தியாவின் மிக விலையுயர்ந்த இனிப்பாக கருதப்படுகிறது. இதன் திகைப்பூட்டும் விலைக்கு பின்னால் தரம், ஆரோக்கியம் மற்றும் ஆடம்பரம் ஆகியவை அடங்கியுள்ளன.
இது 24 கேரட் தங்கத்தின் சாப்பிடக்கூடிய வடிவமாகும். ஆயுர்வேதத்தில், ஸ்வர்ண பஸ்மம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது. இது ஒரு சமண கோவிலில் இருந்து, எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காத முறையில் பெறப்படுவதாக கடையின் உரிமையாளர் கூறுகிறார். Chilgoza என்ற பொருளும் இதில் சேர்க்கப்படுகிறது. இது பைன் மரங்களிலிருந்து கிடைக்கும் பருப்பு வகையாகும். உலகின் மிக விலையுயர்ந்த உலர் பழங்களில் ஒன்றான இது இந்த இனிப்பின் சுவைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. சுத்தமான குங்குமப்பூவும் இதில் சேர்க்கப்பட்டு, இனிப்பிற்கு ஒரு தனித்துவமான நறுமணத்தையும், சுவையையும் அளிக்கிறது.
இந்த அரச இனிப்புக்கு பின்னால் இருப்பவர் அஞ்சலி ஜெயின் என்ற பெண் தொழில் முனைவோர். பட்டய கணக்காளரான இவர், பாரம்பரிய இந்திய இனிப்புகளையும், ஆயுர்வேதத்தையும் இணைத்து சுவை, ஆரோக்கியம், மற்றும் அரசத்தன்மை ஆகிய மூன்றையும் ஒரே படைப்பில் கொண்டு வர விரும்பியுள்ளார். ஒவ்வொரு இனிப்பு துண்டும், பார்ப்பதற்கு ஒரு தங்க ஆபரணம் போல காட்சியளிக்கிறது.
"ஸ்வர்ண பிரசாதம்" அதன் விலைக்கு ஏற்ப, பிரத்யேகமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இனிப்பு, ஒரு நகைப்பெட்டியை போன்ற அழகான பெட்டியில் வைத்து பேக் செய்யப்படுகிறது. ஒரு கிலோ விலை ரூ.1.11 லட்சம் என்றாலும், ஒரு துண்டின் விலை சுமார் ரூ.3,000 ஆகும். இதனை அன்புக்குரியவர்களுக்குப் பரிசாக அளிக்கும்போது, அது ஒரு இனிப்பை தாண்டி, ஒரு மதிப்புமிக்க பரிசாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கடையில் 'கோல்டு சீரிஸ்' என்ற பெயரில் பிஸ்தா லோஞ்ச் (கிலோ ரூ.7,000), முந்திரி கத்லி (கிலோ ரூ.3,500) போன்ற மற்ற தங்க முலாம் பூசப்பட்ட இனிப்புகளும் கிடைக்கின்றன. மேலும் Dil Se Diwali என்ற பெயரில், குழந்தைகளை கவரும் வகையில், முந்திரியால் செய்யப்பட்ட பட்டாசு வடிவ இனிப்புகளும் இங்கு பிரபலம். இந்த தீபாவளிக்கு, ஜெய்ப்பூரின் இந்த 'ஸ்வர்ண பிரசாதம்', இனிப்பு சந்தையில் ஒரு புதிய ஆடம்பர அலையை உருவாக்கியுள்ளது. இது வெறும் இனிப்பு மட்டுமல்ல, பாரம்பரியத்தையும், நவீனத்தையும், கலையையும் இணைத்த ஒரு அரச அனுபவம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ