)
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்க செய்துள்ளது. ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாகுமா என்கிற புயலை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பு, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்துவதற்கான ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதிலிருந்தே, நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வுகளை மிகவும் கவனமாக மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டியில் முதல் மாநாடு மற்றும் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாடு ஆகியவற்றில் திமுக, பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் விஜய். ஆனால், காங்கிரஸ் கட்சியை பற்றி எங்குமே விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் எப்போதோ ஆண்ட கட்சி. பத்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்ததை எல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்று விஜய் நினைத்திருக்கலாம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் கணக்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில், தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், தொகுதிகளை பங்கிடுவதில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டை சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பி.க்களே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியே கொண்டு வந்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க, அந்த எம்.பி.க்களே தீவிரமாக முயற்சி செய்து வருவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தனது செல்வாக்கை பயன்படுத்தி, அங்குள்ள அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றுவதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க, காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவல், திமுக தலைமையின் கவனத்திற்கும் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, விஜய் திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள், ராகுல் காந்தியை விஜய் சந்திக்க வேண்டும் என்று சில முக்கிய நபர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும், அதனால் தான் விஜய், காங்கிரஸை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், திமுகவிற்கு ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைத்து ஒரு புதிய அரசியல் அணிக்கு தலைமை தாங்கும் விஜய்யின் இந்த திட்டம் வெற்றி பெறுமா அல்லது முளையிலேயே கிள்ளி எறியப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ