)
US Tariffs Latest News: புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் புதிய வரிகள் புதன்கிழமை (அமெரிக்க நேரப்படி), அதாவது இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், தொழிலாளர் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் போன்ற துறைகள் மிதமான அழுத்தங்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மருந்துகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் எஃகு ஆகியவற்றில் அதிக தாக்கம் இருக்காது. ஏற்கனவே உள்ள கட்டண கட்டமைப்புகள் மற்றும் வலுவான உள்நாட்டு நுகர்வு காரணமாக ஒப்பீட்டளவில் இவற்றின் மீதான தாக்கம் மிகக் குறைவாக இருக்கும்.
SBI ஆராய்ச்சி அறிக்கை
அமெரிக்க வரிகள், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40-50 அடிப்படை புள்ளிகள் அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிக உள்ளீட்டு செலவு பணவீக்கத்திற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் ஒரு புதிய SBI ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“50 சதவீத வரிகள் காரணமாக 45 பில்லியன் டாலர் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்பதால், மோசமான சூழ்நிலையில், இந்தியாவின் வர்த்தக உபரி வர்த்தக பற்றாக்குறையாக மாறும். இருப்பினும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
இந்தியாவிற்கு நஷ்டம், சீனா, வியட்னாமிற்கு லாபம்
அதிக வரிகள் காரணமாக, இந்தியாவின் தயாரிப்புகள் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் போட்டித்தன்மையை இழக்கக்கூடும். ஏனெனில் இந்திய பொருட்களுக்கான வரி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுடன் முக்கிய பொருட்களுக்கான ஏற்றுமதியில் போட்டியில் இருக்கும் பிற நாடுகளின் வரிகள் இந்தியா மீதான வரியை விட குறைவாக உள்ளன. பிற நாட்டு வரிகள் பின்வருமாறு:
- சீனா (30 சதவீதம்),
- வியட்நாம் (20 சதவீதம்),
- இந்தோனேசியா (19 சதவீதம்) மற்றும்
- ஜப்பான் (15 சதவீதம்)
"இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி இடமாக அமெரிக்கா தொடர்ந்து உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜவுளித் துறையில் இந்தியா தொடர்ந்து கணிசமான சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் சீனாவின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த மாற்றம் அமெரிக்க விநியோகச் சங்கிலி ஏற்பாடுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறைக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. இந்தத் துறையின் 28.5 பில்லியன் டாலர் வருடாந்திர ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்க வரிகள் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடத்தக்க இடையூறுகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
தங்கள் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பும் இறால் ஏற்றுமதியாளர்கள், அதிக வரிகளால் கடுமையான இழப்புகள் மற்றும் ஆர்டர் ரத்து அறிவிப்புகளுக்கான அச்சத்தில் உள்ளனர். இது அமெரிக்க நுகர்வோருக்கான விலைகளையும் பாதிக்கிறது. அமெரிக்காவில் இந்திய இறாலுக்கான விலைகள் அதிகரித்தால், குறைந்த விலையில் இறால் வழங்கும் ஈக்வடார் நாட்டிற்கு ஆர்டர்கள் செல்லும். இது ஈக்வடார் நாடு போன்ற இறால் போட்டியாளர்களின் ஒப்பீட்டில் இந்தியாவின் போட்டித்தன்மையை வலுவிழக்கச் செய்யும்.
இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதிக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 6 சதவீதம் (2024 இல்). இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவிற்கு (FY25) செல்கிறது.
இதற்கிடையில், அமெரிக்கா புதுப்பிக்கப்பட்ட பணவீக்க அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மின்னணுவியல், ஆட்டோக்கள் மற்றும் கஸ்டமர் டியூரபிள் பொருட்கள் போன்ற இறக்குமதி உணர்திறன் துறைகளில் இது அதிகமாக காணப்படுகின்றது. சமீபத்திய வரிகளின் பாஸ்-த்ரூ விளைவுகள் மற்றும் பலவீனமான டாலர் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. வரிகளின் விநியோக-பக்க விளைவுகள் மற்றும் மாற்று விகித இயக்கங்களால், 2026 வரை அமெரிக்க பணவீக்கம் 2 சதவீத இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 50% விதிப்பால் இந்தியாவில் ஏற்படவுள்ள தாக்கங்கள் பற்றி தற்போது ஒரு அனுமானம் உள்ள போதிலும், உண்மையான தாக்கங்களும், அதற்கு இந்தியா எவ்வாறு தயாராகலாம் என்பதற்கான வழிமுறைகளும் சில மாதங்களில் தெளிவாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ