)
Vice President, India Bloc Candidate: இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திருச்சி சிவாவை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வேட்புமனுக்களை ஆகஸ்ட் 22ஆம் தேதி பரிசீலனை மேற்கொள்ளும். வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற ஆகஸ்ட் 25ஆம் தேதி கடைசி தேதியாகும்.
ஒருவேளை இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டால் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். தற்போதைய சூழலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.
542 இடங்களை கொண்ட மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் 293 பேரும், இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் 234 பேரும், மற்றவர்கள் 15 பேரும் உள்ளனர். அதேநேரத்தில், 239 இடங்களை கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் 132 பேரும், இந்திய கூட்டணியினர் 77 பேரும், மற்றவர்கள் 30 பேரும் உள்ளனர். அதாவது, மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் 425 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணியில் 311 உறுப்பினர்களும் உள்ளனர். மற்றவர் 45 பேர் உள்ளனர்.
இந்நிலையில், பாஜக தங்களது வேட்பாளர்தான் வெற்றிபெறுவார் என தெரிந்தும், அதற்கு ஒரு அரசியல் கணக்கை வைத்தே, வேட்பாளரின் பெயரை அறிவித்திருக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையைச் சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சமூகத்தில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் அதிக வாக்கு வங்கி இருப்பதாலும், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் இதைவைத்து வாக்குகளை அறுவடை செய்யவும் தேசிய ஜனநாயக கூட்டணி வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மறுபுறம் இந்தியா கூட்டணி இன்றுதான் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். இதுகுறித்து முடிவு செய்ய பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மாலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். எதிர்க்கட்சிகள் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமா அல்லது எதிர்த்து வேட்பாளரை அறிவிக்குமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்ற கேள்விகள் இருக்கிறது. மேலும், ஒருவேளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்காவிட்டால், தமிழரை நிராகரித்துவிட்டார் என எதிர் பரப்புரை செய்யவும் பாஜக தயாராக இருக்கும்.
எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா கூட்டணியும் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் ப. சிதம்பரம் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டாலும் திமுக இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது பிரதிநிதியை முன்னிலைப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, திமுகவின் துணை பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவை துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது இன்னும் உறுதியாகவில்லை. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துமா இல்லையா என்பதே இன்னும் உறுதியாகவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ