V.S. Achuthanandan Biography: கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இன்று உயிரிழந்த நிலையில், நூற்றாண்டை கடந்த அவரது வாழ்வை இங்கு விரிவாக காணலாம்.

V.S. Achuthanandan Biography in Detail: கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 21) காலமானார். அவருக்கு வயது 101. 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரளாவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த வி.எஸ். அச்சுதானந்தனை நூற்றாண்டை கடந்த ஒரு சகாப்தம் என்றழைக்கலாம். அந்த வகையில், நூற்றாண்டை கடந்த அவரது வாழ்வை திரும்பிப் பார்ப்பதும் முக்கியமான ஒன்று எனலாம்.
V.S. Achuthanandan: அச்சுதானந்தனின் ஆரம்ப கட்ட வாழ்வு
கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தில் சங்கரன் - அக்கம்மா தம்பதிக்கு 1923ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பிறந்தவர்தான் அச்சுதானந்தன். இலம் வயதிலேயே இவர் தனது பெற்றோர் இழந்துவிட்டார். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், அவரது அண்ணனுடன் தையல் கடையில் வேலைப் பார்த்துள்ளார். தொடர்ந்து தென்னை நார் எடுக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றினார். பின்னர் வசுமதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். வசுமதி அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்த தம்பதிக்கு ஆஷா, அருண்குமார் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
V.S. Achuthanandan: 15 வயதில் தொழிற்சங்க பணி
அச்சுதானந்தன் அவரது 15வது வயதில் அதாவது 1938ஆம் ஆண்டில் அச்சுதானந்தன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து அவர் மாநில காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர தொண்டராக பணியாற்ற தொடங்கினார். 1957ஆம் ஆண்டு கேரள மாநில சிபிஐ கட்சியின் செயலக உறுப்பினராக தேர்வானார்.
V.S. Achuthanandan: எம்எல்ஏவான அச்சுதானந்தன்
1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியே உதயமானது. அதன் நிறுவனத் தலைவர்களில் அச்சுதானந்தனும் ஒருவர். 1967ஆம் ஆண்டு ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா தொகுதியில் சிபிஐ வேட்பாளராக போட்டியிட்ட அச்சுதானந்தன் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி முதல்முறையாக எம்எல்ஏ ஆக தேர்வானார். 1970ஆம் ஆண்டு அத்தொகுதியில் மீண்டும் நடைபெறற தேர்தலிலும் அவரே வென்றார். ஆனால், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அம்பலப்புழா தொகுதியில் தோல்வியடைந்தார்.
V.S. Achuthanandan: ஆழப்புழா டூ மலம்புழா
1980ஆம் ஆண்டு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை பெற்றார். அதன்பின் 1985ஆம் ஆண்டில் சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக தேர்வானார். அதன்பின் 2009இல் தான் கேரளாவின் முதலமைச்சராக இருந்தபோது, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சிபிஐ பொலிட் பீரோவில் இருந்து நீக்கப்பட்டார்.
We pay homage to Comrade #VSAchuthanandan, the voice of the toiling masses. pic.twitter.com/NupR6XeLKP
— CPI (M) (@cpimspeak) July 21, 2025
1975க்கு பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து 1991ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் வென்று சட்டப்பேரவைக்கு சென்றார். அப்போது ஆழப்புழாவின் மாராரிகுளம் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்றார். 1996இல் அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து 2001ஆம் ஆண்டில் பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
V.S. Achuthanandan: முதலமைச்சர் பொறுப்பு
2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்தான் அச்சுதானந்தனுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மலம்புழா தொகுதியில் UDF வேட்பாளரை சுமார் 20,017 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அச்சுதானந்தன். 2006ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கேரள முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், 2011ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிவரை பொறுப்பு வகித்தார்.
2011 தேர்தலிலும் மலம்புழா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் ஆட்சியை தவறிவிட்டார். இதனால் 2011-16 வரை எதிர்க்கட்சித் தலைவராக செயலாற்றினார். அசுதானந்தனின் நெருங்கியவர்களான விகே சசிதரன், ஏ சுரேஷ், கே பாலகிருஷ்ணன் ஆகியோர் சிபிஎம் பொலிட் பீரோவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது அவரின் அரசியல் வாழ்வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் 2016ஆம் ஆண்டில் மீண்டும் மலம்புழா தொகுதியில் இருந்து போட்டியிட்டார். சிபிஎம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அவருக்கு பதில் பினராயி விஜயன் முதலமைச்சர் பொறுப்பை பெற்றார். அச்சுதானந்தன் கேரள நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
V.S. Achuthanandan: அச்சுதானந்தனின் ஆட்சிக்காலம்...
இவருடைய ஆட்சிக்காலத்தில் மூணாரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த சொகுசு விடுதிகள், தேயிலை தோட்டங்கள் அனைத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சராக சபரிமலை கோயிலுக்கு இவர் மலையேறி சென்று தரிசனம் மேற்கொண்டார்.
இவருடைய ஆட்சிக்காலத்தில் கேரளாவில் தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி பெரும் வளர்ச்சிக் கண்டது. மேலும், கேரளாவின் ஏற்றுமதி தேசிய சராசரியை மிஞ்சியது. மேலும் இவரது ஆட்சிக்காலத்தில் சுற்றுலா துறை பெரும் வளர்ச்சி கண்டது. குறிப்பாக மலப்புழா அணை, கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஆகிய சுற்றுலா தலங்கள் பல்வேறு புதுப்புது வசதிகளை பெற்றன. இவர் தொடங்கிய ஐடி பார்க் கொல்லம் Technopark பெரும் கவனத்தை பெற்றது. மேலும் மாநிலத்தில் நிலவிய லாட்டரி மாஃபியாக்களுக்கு எதிராகவும் தக்க நடவடிக்கையை மேற்கொண்டார்.
V.S. Achuthanandan: சிறைவாசமும், தலைமறைவும்...
அச்சுதானந்தன் அவரது நீண்ட அரசியல் வாழ்வு முழுவதும் மிக எளிமையானதாகவே அமைத்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கே உண்டான சிறைவாழ்வும், தலைமறைவு வாழ்க்கையும் அச்சுதானந்தனையும் விட்டுவைக்கவில்லை. இவர் அவரது கம்யூனிஸ்ட் அரசியல் வாழ்வில் 5 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். மேலும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டுள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.16.1 லட்சம் என்றும் கூறப்படுகிறது, ஆனால் உறுதிசெய்யப்படவில்லை.
Red Salute to Comrade V. S. Achuthanandan!
— CPI (M) (@cpimspeak) July 21, 2025
Veteran communist leader and Former Kerala Chief Minister V. S. Achuthanandan passed away at the age of 101 on July 21. His life of struggle and unwavering dedication to the cause of the people will forever be an inspiration. pic.twitter.com/lfEDkh1PTC
V.S. Achuthanandan: நூற்றாண்டு கடந்த மக்கள் தலைவர்
எளிமை, நேர்மை, போராட்ட குணங்களை கொண்ட அச்சுதானந்தன் ஏழை, எளிய மக்களுக்காக கடுமையாக பாடுபட்டார். அவர்களுக்கான குரலாகவும் இருந்து வந்தார். இதனால் அவருக்கு மக்களிடம் பெரியளவில் செல்வாக்கும் இருக்கிறது. அதனால்தான் 10 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம். கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இவரது வாழ்க்கையும், சமூகத்திற்கு இவர் ஆற்றிய பணியையும் கொண்டாடும் வகையில் இவரது 'நூற்றாண்டு விழா' மிகச் சிறப்பாக கொண்டாடப்ப்டது. இந்த விழாவில் பங்கேற்க பலதரப்பட்ட தலைவர்கள் வருகை தந்து அச்சுதானந்தனின் வாழ்க்கை போற்றிப் புகழ்ந்தனர்.
இந்நிலையில் அவரது 101வது வயதில் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார், என்றும் அவரது புகழும் பணியும் என்னென்றும் நிலைத்துநிற்கும்... இடதுசாரிகளின் முக்கிய அடையாளமாகவும் அவர் திகழ்வார் என்பது ஐயமில்லை... சென்று வாருங்கள் காம்ரேட்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ