)
Bihar Assembly Election 2025: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில, நாளை (நவ. 14) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 20 ஆண்டுகளுக்கு பின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியை கைப்பற்றுமா அல்லது தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் 10வது முறையாக முதல்வர் அரியணையில் ஏறுவாரா என்ற கேள்விகளுக்கான பதில் நாளை தெரியவரும்.
பீகாரில் கடந்த 2020 தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்குப்பதிவு என்பது அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு தேர்தலில் நவ. 6ஆம் தேதி, 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 65.08% வாக்குகள் பதிவாகின. அடுத்து நவம்பர் 11ஆம் தேதி, 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நடந்த 2ம் கட்ட வாக்குப்பதிவில் 68.76% வாக்குகள் பதிவாகின. இரண்டையும் சேர்த்தால் மொத்தமாக 66.91% வாக்குகள் பதிவாகின. அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலை விட சுமார் 9.62% வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது. 57.29% வாக்குகள் மட்டுமே கடந்த 2020 தேர்தலில் பதிவாகியிருந்தது.
பீகார் தேர்தல் வரலாற்றை பொருத்தவரை, 5% அளவிற்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு முன் மூன்று முறை இவ்வாறு நடந்திருக்கிறது. 1962 தேர்தலை விட 1967 தேர்தலில் வாக்குப்பதிவு 7% உயர்ந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைத்தனர்.
1977 தேர்தலை விட 1980 தேர்தலில் 6.8% வாக்குகள் பதிவானபோது, ஜனதா தளம் ஆட்சியை இழந்து, மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது. அதேபோல், 1985 தேர்தலை விட 1990 தேர்தலில் 5.8% வாக்குப்பதிவு அதிகரித்தபோது, காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது, லாலு பிரசாந்த் யாதவ்வின் ஜனதா தளம் கட்சி அப்போது ஆட்சிக் கட்டிலில் ஏறியது. லாலு பிரசாத் யாதவ் முதல்வரானது அதுவே முதல்முறையாகும்.
அந்த வகையில், இந்த முறை 9.62% வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேர்தலுக்கு பிந்தயை கருத்துக்கணிப்புகள் வேறு கருத்தை நிறுவுகின்றன. அதாவது, தேசிய ஜனநாய கூட்டணிக்கு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. Axis My India மற்றும் Today’s Chanakya கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 130 மற்றும் மகா கூட்டணி 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டி தேவை 122 இடங்கள்தான். அதாவது இரு அணிகளுக்கும் கடுமையாக போட்டி இருக்கும் என்றும், வெற்றி - தோல்விக்கான இடைவெளி கடந்த தேர்தலை போல மிகக் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்த அணி ஆட்சிக்கு வரும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு கள நிலவரமும் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
அந்தச் சூழலில், பெண்கள் தான் பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தற்போது உருவெடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பீகாரில் மொத்தமாக 66.91% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதில் ஆண்களின் வாக்குகள் - 62.8 சதவீதமும், பெண்களின் வாக்குவாதம் - 71.6 சதவீதமும் பதிவாகியிருக்கிறது. அதாவது பெண்கள் பெரும்பாலானோர் வாக்களித்திருக்கிறார்கள். பெண்களின் அதிகபட்ச ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் ஆட்சியை பிடிப்பார்கள் எனலாம்.
இதை முன்கூட்டியே தேசிய ஜனநாயக கூட்டணியும், மகா கூட்டணியும் மிகச் சரியாக புரிந்துகொண்டு பணியாற்றின எனலாம். தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் யாதவிற்கு பெரியளவில் பெண்களின் ஆதரவு இருப்பது உண்மைதான். சட்ட ஒழுங்கை நிலைநாட்டியது, மதுவிலக்கை கொண்டுவந்தது, பெண்களுக்கு சைக்கிள் கொடுத்தது உள்பட பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை நிதிஷ் குமார் யாதவ் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தியிருக்கிறார்.
அது மட்டுமின்றி, பீகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி அன்று முக்கியமந்திரி மஹிலா ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது, இது பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி அன்று 25 லட்ச பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. சுய தொழில் மற்றும் சிறு, குறு தொழில்களை நடத்தும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், தேர்தலுக்கு முன் சுமார் 1 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டம் என்பதால் இது சட்டப்பூர்வமான நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. மேலும் தற்போது பெண்களின் வாக்குகள் அதிகம் பதிவாகியிருப்பதன் மூலம், இது நிதிஷ் குமாருக்கும், குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் சாதகமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். வரும் ஜனவரியில் ஒரு கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதன்மூலம், பெண்களின் ஆதரவு தேஜஸ்விக்கும், மகா கூட்டணிக்கும் இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த வகையில், தற்போதைய பெண்களின் அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக இருந்துள்ளது என்பது நாளை தெரிந்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ