)
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை காரணம் காட்டி, பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை, நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது. "வசதி படைத்தவர்கள் வாழும் டெல்லிக்கு மட்டும் சுத்தமான காற்று போதுமா? நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க உரிமை இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கும், மனித உடல் நலத்திற்கும் பெரும் கேடு விளைகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, அர்ஜுன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த நீதிமன்றம், 2024ம் ஆண்டு முதல் டெல்லியில் அனைத்து விதமான பட்டாசுகளையும் விற்கவும், வெடிக்கவும் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையால், பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிய இந்த மனு, உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வாழ்வாதார பிரச்சினையை முன்வைத்து பேசினர். இதை கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், குறுக்கிட்டு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
அவர் கூறியதாவது, "பட்டாசுகளுக்கான தடை உத்தரவு என்பது, வசதி படைத்தவர்கள் வாழும் டெல்லிக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது; அது நாடு முழுவதும் இருக்க வேண்டும். டெல்லியை போலவே, சுத்தமான காற்றை சுவாசிக்க, இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிமை இல்லையா? ஏன் இந்தத் தடையை நாடு முழுவதும் நீட்டிக்கக் கூடாது?" என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கப்படுவதையும், அதனால் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இறுதியில், இதுபோன்ற தடைகளால் பாதிக்கப்படுவது ஏழைத் தொழிலாளர்கள்தான் என்றும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
இந்த வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரும் மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மேலும், பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் ஒரு விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த கேள்விகள், பட்டாசு தடை தொடர்பான விவாதத்தை மீண்டும் தேசிய அளவில் தொடங்கி வைத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் இடையே ஒரு சமநிலையான முடிவை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு இது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ