இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் என்பதை நாம் அனைவருமே அறிவோம். நம் நாட்டில் ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிக அரிது. இந்திய ரயில்வே வெறும் போக்குவரத்து வசதியை கொடுக்கும் துறையாக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை விரைவுபடுத்தவும், மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாகவும் முக்கிய பங்காற்றி வருகிறது.
நம்பகமான போக்குவரத்து வழிமுறையாக உள்ள இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே நாடு முழுவதும் தினம் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. இதில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், இந்திய ரயில்வே குறைந்த கட்டணத்துடன், எல்லோரும் அணுகக்கூடிய, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்து வழிமுறையாக அதன் முத்திரையைப் பதித்துள்ளது. நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பல பகுதிகளை பெரிய பெருநகரங்களுடன் இணைக்க அதன் மிகப்பெரிய நெட்வொர்க் திறன்பட செயல்படுகிறது.
இது தவிர, பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே பல விதிகளை மாற்றி அமைக்க அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விதிகளின் நோக்கம், ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஒரு நல்ல பயண அனுபவத்தை வழங்குவதாகும். அவர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சேவையை மேம்படுத்துவதுடன், அவர்களது குறைகளை போக்கவும் நடவடிக்கையை மேம்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தினம் ரயில்களில் எத்தனை பயணிகள் பயணிக்கிறார்கள்?
நாட்டில் தினம் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன, அந்த ரயில்களில் எத்தனை பயணிகள் பயணிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?... நாட்டில் சுமார் 22,593 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் 13,452 பயணிகள் ரயில்கள், மீதமுள்ளவை சரக்கு ரயில்கள். ஒவ்வொரு நாளும் 2.40 கோடி பயணிகள் இந்திய ரயில்களில் பயணிக்கின்றனர். எனினும், புதிய ரயில்களின் அறிமுகம் உள்ளிட்ட பல காரணங்களால், இந்த புள்ளிவிவரங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரயில் வெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்தும் இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே புதிய வழித்தடங்களில் ரயில்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களின் எண்ணிக்கையையும் இந்திய ரயில்வே அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் சுமார் 69 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், ரயில் வெட்வொர்க்கையும் இந்திய ரயில்வே வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இது தவிர, ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
உலகின் மிக உயரமான ரயில் பாலம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தாரோட்டில் உள்ள செனாப் ரயில் பாலம் என்று அழைக்கப்படும் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை இந்தியா கொண்டுள்ளது. பொறியியல் அதிசயமாக விளங்கும் இந்த பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத தொடக்கத்தில் திறந்து வைத்தார். இது பலத்த காற்று மற்றும் பூகம்பங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. இந்தப் பாலம் உதம்பூர்-ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரயில் இணைப்பை வழங்கும். செனாப் பாலம் ஈபிள் கோபுரத்தை விட உயரமானது. ஆற்றுப் படுகையிலிருந்து 1,178 அடி உயரத்தை எட்டுகிறது, மேலும் அதன் பிரதான வளைவு 467 1,532 அடி நீளம் கொண்டது. இந்தப் பாலத்தைக் கட்ட குறைந்தது 28,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகின் மிக நீளமான நடைமேடை
உலகின் மிகப்பெரிய ரயில் நடைமேடையும் இந்தியாவில் உள்ளது. உலகிலேயே மிக நீளமான ரயில் நடைமேடை என்ற பெருமையை கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சித்தாரூட சுவாமிஜி ஹூப்பள்ளி சந்திப்பு பெற்றுள்ளது. ஹூப்ளி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 1,507 மீட்டர் பரப்பளவில், தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதற்கு அடுத்தபடியாக, உத்தரப்பிரதேசத்தின் வடக்கு மாநிலத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை சுமார் 1,366 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ