பிரமோத் சாவந்த்: ஆயுர்வேத மருத்துவர்... கோவாவின் புதிய முதல்வர்!
கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.
கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.
கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 63 வயதான கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று முன்தினம் காலாமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறுதிச்சடங்குகள் முடிந்து நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மனோகர் பாரிக்கரின் உடல் தேசியக்கொடியால் மூடப்பட்டு, ராணுவ வாகனத்தில் ஏற்றி பனாஜி நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மிராமர் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோவா முன்னாள் முதல்வர் தயானந்த் பன்டோக்கர் நினைவிடத்தின் அருகே வைக்கப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மனோகர் பாரிக்கரின் மறைவையடுத்து பாஜக-வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை. எனவே தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைக்க வேண்டும் என அழைப்பு விடுக்க வேண்டும் எனக்கோரிக்கையுடன் காங்கிரஸ் கடிதம் எழுதியது.
இதற்கிடையில், கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று தகவல்கள் வெளியாகின. பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ, மத்திய அமைச்சர் மற்றும் மூத்த பா.ஜ.க. மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பிரமோத் குமார் சாவந்த் (வயது 45) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா நள்ளிரவு 2 மணி அளவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இரண்டு துணை முதலமைச்சர்கள் மற்றும் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில் கோவாவின் புதிய முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார் பிரமோத் சாவந்த். இவர் கோவா மாநிலத்தின் 13வது முதல்வர். ஆயுர்வேத மருத்துவரான இவர் முன்னதாக மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசில், கோவா சட்டமன்ற சபாநாயகராக செயல்பட்டவர்.
இவர் கோலாப்பூர் கங்கா கல்வி சமுதாய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயின்று, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்றுவர். புனேவில் உள்ள திலக் மகாராஷ்டிரா பல்கலையில், சமூகப் பணி பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.