Kamal Haasan Controversial Films Before Thug Life : தமிழ் திரையுலகின் லெஜண்ட் நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், இதுவரை தனது திரை வாழ்க்கையில் பலவித சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார். அந்த சர்ச்சைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Kamal Haasan Controversial Films Before Thug Life : இந்திய திரையுலகில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் பெரிய இடத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர், நடிகர் கமல்ஹாசன். தற்போது வெளியாக இருக்கும் இவரது தக் லைஃப் திரைப்படம், இவர் சொன்ன ஒரு வார்த்தையால் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில், இதுவரை வெளியான அவரது பல படங்கள் இதுவரை பெரிய பிரச்சனைகளில் எல்லாம் சிக்கியிருக்கிறது. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
தக் லைஃப் படத்தின் சர்ச்சை:
நடிகர் கமல்ஹாசன், தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கூறியது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கன்னடர்கள் அனைவரும் கமலுக்கு எதிராக திரும்பினர்.
கர்நாடகாவில் பாதுகாப்பாக படம் வெளியாக வேண்டும் என்று கமல் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதன் வழக்கு விசாரணை நடைப்பெற்ற நிலையில், “நீங்கள் மொழியாளரா அல்லது வரலாற்று ஆராய்ச்சியாளரா?” என்று கேள்வி எழுப்பியதுடன், கமல் மன்னிப்பு கேட்காததால் படத்தின் ரிலீஸை ஜூன் 10 வரை தள்ளி வைத்தது.
இது தக் லைஃப் படத்தின் ரிலீஸை பாதித்ததோடு, “தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததா?” என்று பலர் மனங்களிலும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. சில ஆராயச்சியாளர்கள் கமல் பக்கம் பேச, பலர் கன்னடமும் தமிழும் சகோதர மொழிகள்தான், எந்த மொழியில் இருந்தும் வேறு மொழி பிறக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
விஸ்வரூபம் பட சர்ச்சை..
கமல்ஹாசன் எழுதி-இயக்கி-நடித்த படம், விஸ்வரூபம். 2013ஆம் ஆண்டு வெளியான இந்த படம், எண்ணிலடங்கா சர்ச்சைகளை சந்தித்தது. இப்படம், வெளிநாட்டில் சாதாரண ஆளாக இருந்து கொண்டு, உளவாளியாக இருக்கும் விஸ்வநாதன் என்பவரை சுற்றி நிகழும் கதை இது. உலகளாவிய பயங்கரவாதத்தை காண்பிப்பது போல, இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கும். இந்த படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல காட்சிப்படுத்தியிருப்பதாக கூறி, தமிழ்நாடு முஸ்லீம் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த படத்தை மத்திய திரைப்பட வாரியம் பார்த்து, சான்றிதழ் வழங்கிய பின்பும் இந்த பிரச்சனை தொடர்ந்தது. இறுதியில், கமல் 5 காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தை வெளியிட கிரீன் சிக்னல் கிடைத்தது.
பல்வேறு போராட்டங்கள், நிதி சிக்கல்கள், ரிலீஸிற்கு தடை என்று அனைத்தையும் இப்படம் சமாளித்து ரிலீஸான சமயத்திலும் இதனை திரையிடக்கூடாது என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இறுதியில் படம், ஜனவரி 23ஆம் தேதி, 2013 அன்று வெளியானது.
ஹே ராம்:
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாத்துராம் கோட்சேவின் கண் வழியே கதையை காண்பித்த கதைதான், ஹே ராம். இதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததால், படத்தை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த படத்தில் கமல்-ராணி முகர்ஜியின் வயது வித்தியாசமும், இவர்களுக்கு இடையேயான முத்தக்காட்சியும் பெரும் சர்ச்சையாக மாறியது. இதைத்தொடர்ந்து, இந்தப் படம் மத அரசியலின் இருண்ட பக்கத்தையும் சமூகத்தில் அவற்றின் தாக்கங்களையும் காட்டுகிறது. இது, மதவாதிகளை புண்படுத்தியதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிற சர்ச்சைகள்..
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் தலைப்பு மருத்துவத் தொழிலை கேலி செய்வதாகவும், மருத்துவ சகோதரத்துவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் கூறி, அப்போதைய தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.ஆர். பாலசுப்பிரமணியன் மனு கொடுத்தார். அதே போல, விருமாண்டி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், “சண்டியர்”. இந்த படத்தின் டைட்டில், குறிப்பிட்ட ஒரு சாதியினரின் ஆதிக்கத்தை காட்டுவதாக புகார் எழுந்ததால், ‘விருமாண்டி’ என்று மாற்றபட்டது.
இதை தவிர்த்து, தசாவதாரம், ஆளவந்தான், உத்தம வில்லன் உள்ளிட்ட கமல்ஹாசனின் படங்கள் சில பிரச்சனைகளை சந்தித்தன. ஆனால் அவை அனைத்தையும் கமல் சாதூர்யமாக கையாண்டிருக்கிறார். இப்போது வந்திருக்கும் தக் லைஃப் பிரச்சனையையும் அப்படியே கையாளர்வார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ