)
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதியான சூர்யா மற்றும் ஜோதிகாவின் மூத்த மகள் தியா, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்று, அவரது மார்க்ஷீட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும் இது அவருடைய உண்மையான மார்க்ஷீட்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் தியாவிற்கு பெரும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் தங்களது யதார்த்தமான நடிப்பின் மூலம் பல ஆண்டுகளாக ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனம் அமைத்து இருப்பவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல வெற்றி படங்களில் இணைந்து நடித்த இவர்கள், கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு, தியா (17) என்ற மகளும், தேவ் (15) என்ற மகனும் உள்ளனர்.
இருவருமே சினிமாவில் பிஸியாக இயங்கி வந்தாலும், தங்களின் குழந்தைகளை மீடியா வெளிச்சத்தில் அதிகம் காட்டாமல், அவர்களின் கல்விக்கு மட்டுமே சூர்யாவும் ஜோதிகாவும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குழந்தைகள் இருவருமே படிப்பில் மிகவும் சுட்டியாக இருந்து வருவது பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளது.
#Suriya With Daughter #Dhiya pic.twitter.com/OTcC8cDQVP
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 10, 2025
சூர்யா சமீபத்தில் தனது குழந்தைகளின் சிறப்பான கல்விக்காகவும், ஜோதிகாவின் பாலிவுட் பட வாய்ப்புகளுக்காகவும் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த தியா, இந்த ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார் என்று கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தியாவின் மார்க்ஷீட் போன்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அனைத்து பாடங்களிலும் மிக சிறந்த மதிப்பெண்களை பெற்று உள்ளார். அவர் மொத்தம் 600-க்கு 581 மதிப்பெண்கள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.
| தமிழ் | 96 / 100 |
| ஆங்கிலம் | 97 / 100 |
| கணிதம் | 94 / 100 |
| இயற்பியல் | 99 / 100 |
| வேதியியல் | 98 / 100 |
| கணினி அறிவியல் | 97 / 100 |
தமது தாய் மொழித் தமிழ் மீதுள்ள தனிப்பட்ட ஆர்வத்தால், மும்பையில் படித்தாலும் தமிழையும் ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து, அதில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதேபோல, இயற்பியல் பாடத்தில் முழு மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பை ஒரே ஒரு மதிப்பெண்ணில் (99) அவர் தவறவிட்டுள்ளார்.
படிப்பில் எப்போதும் தனி கவனம் செலுத்தி வரும் தியா, 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் இதேபோன்றதொரு சிறப்பான சாதனையை படைத்திருந்தார். அப்போது அவர் 500-க்கு 487 மதிப்பெண்கள் (97%) பெற்று அசத்தியிருந்தார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்பில் அவர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது. இப்போது 12ம் வகுப்பிலும் அதே உத்வேகத்துடன் படித்து, 581 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குடும்பத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் இது அவரது மார்க்சீட்டா என்பது தெரியவில்லை.
தியாவின் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாமல் சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்கள் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "பெற்றோர் சினிமாவில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், சினிமா மாயையில் சிக்கிக்கொள்ளாமல் படிப்பில் இவ்வளவு சிறப்பாக கவனம் செலுத்துவது மிகவும் பெருமையான விஷயம்" என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தியாவை போலவே சூர்யாவின் மகன் தேவ் கராத்தே விளையாட்டில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். தியாவின் அடுத்தகட்ட உயர்கல்வி குறித்த முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.