அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம்' எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க், ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.
ஜூலை மாதம் 4ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது . இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் உதய்.கே பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும்.. பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். இதற்கு என் அம்மா தான் காரணம். அம்மாவிற்கு அடுத்ததாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். அருண் பாண்டியனின் வழிகாட்டலால்தான் இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டிற்குள் தரமாக உருவாக்க முடிந்தது'' என்றார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், ''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். அதற்கு முன் அவர் இயக்கிய 'யாக்கை திரி' எனும் குறும்படத்தினை காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்... அதன் தொழில்நுட்ப தரம்... சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது. அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்த படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக.. ஒரு நடிகராக.... இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.
இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான். இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால்.. நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்.'' என்றார்.
நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், '' இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏன் யாரையும் அழைக்கவில்லை என்றால் .. அவர்கள் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றி மிகையாக பேசி விடுவார்களோ ..! என்பதற்காக தான் யாரையும் அழைக்கவில்லை. நாங்கள் எங்களுக்கு பிடித்தது போன்ற ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற வகையில் தரமுள்ள படத்தை தயாரித்திருக்கிறோம். நீங்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏனெனில் திரைக்கதை அவ்வளவு வலிமையுடன் இருக்கிறது. இதனால் தான் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் இல்லாமல் என் நண்பர்களான கருணா மூர்த்தி மற்றும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஊமை விழிகள் படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்'' என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ