)
இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன், பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The Smiles Says it all. Rewinding memories with @CheranDirector's #Autograph Family
— Nikil Murukan (@onlynikil) November 8, 2025
In Cinemas From Nov 14th!
ICYM #AutographTrailer
https://t.co/cWXOIfVxBA #AutographFromNov14 @actress_Sneha #Gobika #Mallika #Kanika #Rajesh @dop_ravivarman @vijaymilton… pic.twitter.com/zrfEErLCPA
இயக்குநர் சேரன் பேசுகையில், ''இந்த மேடை சேரனை பற்றிய பாராட்டுரையாகவும், சேரனை பற்றிய விமர்சன மேடையாகவும் மாறிவிட்டது. இது இப்படித்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால பயணத்தில் எல்லாவித மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா நல்லவர்களையும் சந்தித்து இருக்கிறேன். பல தீய காரணங்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறோம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. வாழ்க்கையில் நிறைய புதிய விஷயங்களை பார்ப்பீர்கள். அதனால் நீ எப்படி இருக்கிறாயோ அதனை அப்படியே கடந்து செல். இதுதான் எனக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்தது.
இந்த மேடையில் பேசிய எல்லோருடனும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் எனக்கான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் இதில் விளக்கம் சொல்வதற்கு எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களுக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். நீங்கள் நிறைய மேடைகளை விழாக்களை பார்த்திருப்பீர்கள். ஒரு இயக்குநரை அவருடைய உதவியாளர்கள் விமர்சித்த மேடை உண்டா? ஆனால் அதை நான் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்தும் கொடுப்பேன். அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவேன். ஏனெனில் ஒரு தகப்பனுக்கு தெரியும் தன்னுடைய பிள்ளைகளின் குணம் என்ன என்று. என் அப்பா என்னை எப்படி வளர்த்தாரோ.. அதே போல் என்னுடைய உதவியாளர்களையும் வளர்த்திருக்கிறேன்.
21 வருடங்களுக்குப் பிறகு ஆட்டோகிராப் படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்த படம் அவர்களுக்கு என்ன சொல்லும்? நான் இப்படித்தான் படம் எடுப்பேன். வணிக நோக்கத்திற்காக நான் படம் எடுத்திருந்தால் என்றைக்கோ காணாமல் போய் இருக்கலாம். பெரிய வெற்றியை கொடுத்து இருப்பேன். அஞ்சு படம் பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றி இருப்பேன். அதன் பிறகு காணாமல் போய் இருப்பேன். ஆனால் இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரையோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்து கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என்னுடைய வெற்றியாக பார்க்கிறேன். அப்படித்தான் நான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன்.
இந்த ஆட்டோகிராப் படத்தைக் கூட அப்படித்தான் உருவாக்கினேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதை கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. இதில் காதல் ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே.. அப்படி என்று சொல்வதுதான் இந்தத் திரைப்படம். 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலை நானே பலமுறை உணர்ந்து பாடி இருக்கிறேன். சினேகனும் பலமுறை பாடியிருக்கிறார். அமீர் நிறைய முறை பாடியிருப்பார். சினேகாவும் இந்த பாடலை நிறைய முறை பாடியிருப்பார். ஏனெனில் தோல்வி அனைவருக்கும் வரும். அதை எதிர்கொண்டு கடந்து சென்று வெற்றி பெறும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதை இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்.
இதைக் கடந்து இந்த படத்தை நான் தற்போது வெளியிடுவதால் எதையும் சாதித்து விடப் போவதில்லை. இன்றைய தலைமுறை எப்படி இருக்கிறது என்று எமக்குத் தெரியும். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம். மனிதனை மனிதனாக பார். அவனை திருத்த வேண்டும் என்று நீ நினைக்காதே. அவனை அப்படியே ரசி. நீ அழகாய் இருப்பாய். அப்படித்தான் நான் இந்த உலகத்தை அழகானதாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆட்டோகிராப் திரைப்படம் முதலில் வெளியான போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகு தான் கூட்டம் அதிகரித்தது. இந்த படத்தை கொண்டாடினார்கள். நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகத்தை அது அளித்தது. விமர்சனங்கள் ஒரு காலத்தில் நேர்மையானதாகவும் விசாலமான பார்வையுடனும் இருந்தது. ஆனால் இன்று அதில் எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இன்று ஆன்லைனை எடுத்துக் கொண்டால் எல்லாம் மார்க்கெட்டிங் என்றான பிறகு நாம் மனிதத்தை இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த படத்தை நான் மீண்டும் எடிட் செய்து 15 நிமிடங்களை குறைத்து இருக்கிறேன். இந்த படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக்ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். இசை பழமை வாய்ந்ததாகவே இருக்குமே, அது கூட ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்மாஸ் போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்து இருக்கிறோம். பார்வையாளர்களை எங்கும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். 50 லட்சம் ரூபாயை செலவழித்து இந்த படம் புதிய அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி இருக்கிறேன்,'' என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ