)
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பான, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அனிருத், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், ரஜினிகாந்த், நாகார்ஜுனா என படத்தில் பணியாற்றுள்ள அனைவரும் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், ரஜினியை புகழ்ந்தும், சில இளம் ஹீரோக்களை பற்றி குறையும் தெரிவித்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய கலாநிதி மாறனின் பேச்சு
கூலி இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எளிமையை புகழ்ந்து பேசிய கலாநிதி மாறன், "இத்தனை ஹிட் கொடுத்தும் ரஜினி சார் மிகவும் எளிமையாக இருக்கிறார். ஆனால், இப்போது இரண்டு படம் ஹிட் கொடுத்தாலே சில இளம் ஹீரோக்கள் பிரைவேட் ஜெட் கேட்கிறார்கள். இந்த மாதிரி ஆடிட்யூட் காட்டுகிறார்கள்" என்று குறிப்பிட்டார். இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகி, "அந்த ஹீரோ யாராக இருக்கும்?" என்ற கேள்வியை எழுப்பியது. கலாநிதி மாறன் "இரண்டு படம் ஹிட் கொடுத்த இளம் ஹீரோ" என்று குறிப்பிட்டதால், நெட்டிசன்கள் பலரும் அது 'லவ் டுடே' படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதனாக இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சினிமா வட்டாரங்களில் வேறு சில நடிகை, நடிகர்களின் பெயர்களும் அடிபடுகிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படப்பிடிப்பின் போது, நடிகை நயன்தாரா ஐதராபாத்திற்கு செல்ல தனி விமானம் கேட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால், கலாநிதி மாறன் தனது பேச்சில் தெளிவாக "ஹீரோ" என்று குறிப்பிட்டதால், அது நயன்தாராவாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் கலாநிதி மாறன் குறிப்பிட்டது சிவகார்த்திகேயனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், சமீபத்திய ஆண்டுகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய இளம் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர். அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'எங்க வீட்டுப் பிள்ளை' மற்றும் 'டாக்டர்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் காரணமாகவே, இந்த சந்தேகம் அவர் மீது எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மறுப்பு
இருப்பினும், இந்த யூகங்களை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். ரஜினிகாந்தை போலவே, சிவகார்த்திகேயனும் மிகவும் எளிமையானவர் என்றும், அடித்தட்டிலிருந்து தனது கடின உழைப்பால் முன்னேறியவர் என்றும், அவர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது தவறானது என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்தோ அல்லது சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாததால், கோலிவுட்டில் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ