Kuberaa Movie Review: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் கொடிகட்டி பறக்கிறார். இதற்கு முன்னர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோரும் நடித்துள்ளனர். ராம் மோகன் ராவ் மற்றும் சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா படத்தின் தனுஷ் ஒரு பிச்சைக்காரராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் இன்று தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா, தெலுங்கு என ஐந்து மொழிகளில் படம் வெளியாகி உள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள்! அதிரடி லிஸ்ட் இதோ
படத்தின் தொடக்கத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருக்கும் ஜிம் சர்ப் மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை கைப்பற்ற முக்கிய அமைச்சர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். இதற்காக ஒரு லட்சம் கோடி லஞ்சமாக கேட்கின்றனர், இந்த வேலையை சரியாக முடிப்பதற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவை வேலைக்கு அமர்த்துகின்றனர். நாகார்ஜுனா இந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்க நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார், அதில் ஒருவராக தனுஷ் உள்ளார். அவர்களின் பெயரில் சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்து பணத்தை மாற்ற திட்டமிடுகின்றனர். இந்த உண்மை தனுஷுக்கு தெரிய வர அவர்களிடம் இருந்து தப்பித்து விடுகிறார். இறுதியில் தனுசை அவர்கள் பிடித்தார்களா? இல்லையா? அவ்வளவு பணத்தை வைத்து தனுஷ் என்ன செய்தார்? இறுதியில் என்ன ஆனது என்பதே குபேரா படத்தில் கதை.
தேவா என்ற கதாபாத்திரத்தில் ஒரு பிச்சைக்காரராக படம் முழுக்க நடித்துள்ளார் தனுஷ். முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். தனுஷ் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்குகளில் விசில் பறக்கிறது. நிச்சயம் இந்த படத்தின் மூலம் அவருக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவரை தொடர்ந்து சீனியர் நடிகரான நாகார்ஜுனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரியாக அதே தோரணையில் அசத்தியுள்ளார். அவரது மனைவியாக வரும் சுனைனாவிற்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் வந்தாலும் அதன் பிறகு படம் முழுக்க வருகிறார் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் அசத்தியுள்ளார். வில்லனாக வரும் ஜிம் சர்ப் அட்டகாசமான நடிப்பை கொடுத்துள்ளார் ,அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
படத்தின் முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் சென்று விடுகிறார் இயக்குனர் சேகர் கம்முலா. ஒரு பிச்சைக்காரர் ஒரு பணக்காரரை எப்படி பிச்சை எடுக்க வைக்கிறார் என்பதே படத்தின் ஒன்லைன் என்று சொல்லலாம். இப்படி ஒரு கதையை யோசித்து எடுத்ததற்கு சேகர் கம்முலாவிற்கு தனி பாராட்டுக்கள். முதல் பாதி முழுக்கவே விறுவிறுப்பாக செல்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் தனியாருக்கு எப்படி கிடைக்கிறது என்பதை இந்த குபேரா படத்தின் மூலம் அனைவருக்கும் கூறியுள்ளார் இயக்குனர். டெக்னிக்கலாகவும் படம் சிறப்பாக இருந்தது. நிக்கித் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது. மொத்தத்தில் குபேராவிற்கு பண மழை தான்.
திரைக்கதையில் விறுவிறுப்பு இருக்கிறது என்றாலும் 3 மணி நேரம் படம் பார்க்கும் உணர்வு ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது, அதனை மட்டும் சரி செய்திருந்தால் இன்னும் ஒரு சிறப்பான படமாக வந்திருக்கும். குறிப்பாக இரண்டாம் பதில் வரும் அந்த ஒரு பாடலையும், ஒரு சில காட்சிகளின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். பெரிதாக லாஜிக் கேள்விகள் இல்லை என்றாலும், ஒரு சில காட்சி அமைப்புகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்து இருக்கலாம்.
மேலும் படிக்க | இது தனுஷ்க்கு வித்தியாசமான படம் DSP ஸ்பீச்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









